வங்கதேச ஆர்டர்களை கைப்பற்ற பட்ஜெட் அறிவிப்பு கைகொடுக்கும்
திருப்பூர்:வங்கதேசத்தின் வர்த்தக வாய்ப்புகளை ஈர்த்து, நிரந்தர ஆர்டர்களாக தக்கவைத்துக் கொள்ள, மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் நிச்சயம் கைகொடுக்கும் என, திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.உள்நாட்டு மானியம், தொழிலாளர் செலவு என பல்வேறு வகையில், நம் நாட்டை காட்டிலும் ஆயத்த ஆடை விலை நிர்ணயத்தில் 14 முதல் 15 சதவீதம் வங்கதேசத்தில் விலை குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக, வளர்ந்த நாடுகள் வங்கதேசத்தை ஆதரித்து வந்தன. ஆனால், அந்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்ட பின், குறித்த காலத்துக்குள் ஆடைகளை அனுப்பி வைக்க முடியாததால், வர்த்தகர்களின் பார்வை, இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன், விசாரணை என்ற நிலையில் துவங்கியது, தற்காலிக ஆர்டர்களாக மாறியிருக்கிறது. வங்கதேசம் இழக்கும் வர்த்தக வாய்ப்புகளை இந்தியா நிச்சயம் ஈர்க்க முடியும் என்கின்றனர் தொழில்துறையினர்.
25 சதவீத வளர்ச்சி உறுதி
திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் கூறுகையில், 'சீனாவுக்கு அடுத்த இடத்தில் உள்ள வங்கதேசத்தின், 1 சதவீத ஆர்டர்களை நாம் கைப்பற்றினால் போதும்; நம் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில், 25 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கிடைக்கும். 'குறிப்பாக, திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி இரட்டிப்பு வளர்ச்சி பெறும். அதற்காக, பட்ஜெட்டில் அறிவித்த, 'பாரத் டிரேடு நெட்' என்ற டிஜிட்டல் கட்டமைப்பையும், ஏற்றுமதி மேம்பாட்டுக்கான கட்டமைப்பையும் சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றனர்.சாத்தியக்கூறுகள் குறித்து தொழில் துறையினர் கூறியதாவது:சுப்பிரமணியன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தலைவர்: பிணையில்லாத கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டதால், புதிய ஆர்டர் பெறுவது எளிதாகியுள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தியை, அரசு சலுகையுடன் நிறுவனங்கள் தொடர வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால், வங்கதேசத்துக்கு சென்ற ஆர்டர்களை திருப்பூரை நோக்கி திருப்ப முடியும்.இளங்கோவன், அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு (அபாட்) தலைவர்:மத்திய பட்ஜெட்டில், ஜவுளி தொழில் வளர்ச்சிக்காக, 5,272 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். குறிப்பாக, திருத்தியமைக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு திட்ட நிலுவைக்காக, 635 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர். ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்தபடி, வட்டி சமன்படுத்தும் திட்டத்துக்கும் நிதி உள்ளீடு செய்ய வாய்ப்புள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்களின் நிதிசார் சிரமங்கள் குறைந்து, புதிய ஆர்டர்களை தைரியமாக ஏற்க முடியும். ராஜா சண்முகம், தேசிய வர்த்தக வளர்ச்சி வாரிய உறுப்பினர்: நம்மிடம் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுகிறது; திறன் வாய்ந்த தொழிலாளர் அதிகளவில் வேண்டும். புதிய ஆர்டர் வரத்தால், வளர்ந்த நிறுவனங்கள் ஆதாயம்பெற வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்த வளர்ச்சி கிடைக்க, மத்திய அரசு, திருப்பூர் கிளஸ்டரின் தேவையை நிறைவேற்றி கொடுக்க வேண்டும். சபரி கிரீஷ், ஏற்றுமதி வர்த்தக ஆலோசகர்: பருத்திக்கு நம்மை சார்ந்தும், பாலிஸ்டர் மற்றும் நைலான் நுால் உற்பத்திக்கு சீனாவை சார்ந்தும் இயங்கி வருகிறது வங்கதேசம்.மூலப்பொருள் விளைச்சலில் வளம் பெற்ற இந்தியா, வங்கதேசம் இழக்கும் வர்த்தக வாய்ப்புகளை, நிச்சயம் ஈர்க்க முடியும். பட்ஜெட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அளித்துள்ள சலுகையை சரியாக பயன்படுத்திக் கொள்வதும் அவசியம். * மோகனசுந்தரம், 'லகு உத்யோக் பாரதி' தேசிய இணைப் பொதுச்செயலர்: பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனையின் போது, 'கிரெடிட் கார்டு' தேவையென, தமிழ்நாடு 'லகு உத்யோக் பாரதி' சார்பில் கோரிக்கை வைத்தோம். அதன்படி, 5 லட்சம் ரூபாய் வரை செலவிடும் வகையில், 'கிரெடிட் கார்டு' திட்டம் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். இந்த பட்ஜெட்டில், குறு, சிறு நிறுவனங்களுக்கு அதிக சலுகை அளித்துள்ளதால், வங்கதேச நாட்டுக்கு செல்லும் ஆர்டர்களை கைப்பற்றுவது எளிதாகி உள்ளது.