சென்னை:தீக்காய சிகிச்சை வசதி, 97 அரசு மருத்துவமனைகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும், ஆரம்ப கட்ட சிகிச்சையே அளிக்கப்படுகிறது. பெரிய அளவிலான பாதிப்புகளுக்கு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தான் பரிந்துரைக்கப்படுகிறது. அங்கு தான், தீக்காயங்களுக்கு என, பிரத்யேக பிரிவு மற்றும் சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர்.இந்நிலையில், தீக்காய சிகிச்சை வசதிகளை பரவலாக்கும் வகையில், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள் என, 97 இடங்களில் அதற்கான வசதிகள் செய்யப்பட உள்ளன.அதன்படி, இம்மருத்துவ மனைகளில் இருந்து வந்துள்ள, ஒரு முதுநிலை டாக்டர், நர்ஸ், மருத்துவ பணியாளர், இயன்முறை மருத்துவர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சை பிரிவு நிபுணர்களிடம் பயிற்சி பெற்று வருகின்றனர்.விரிவான பயிற்சி தருகிறோம்தமிழகத்தில், 97 அரசு மருத்துவமனைகளை சேர்ந்த குழுவினருக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இதுவரை, 56 மருத்துவ குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. சுடுநீர் காயம், ரசாயனம் உள்ளிட்ட பல்வேறு வகையில் ஏற்படும் காயங்களை அடையாளப்படுத்துவது, அதன் பாதிப்பு சதவீதத்தை உணர்ந்து சிகிச்சை அளிப்பது, சிகிச்சைக்கு பிந்தைய பாதிப்புகள், அதற்கான சிகிச்சை முறைகள் உள்ளிட்டவை குறித்து, விரிவான முறையில் பயிற்சி அளித்து வருகிறோம். இதன் வாயிலாக, பாதிக்கப்படுவோருக்கு முதற்கட்ட சிகிச்சை பயன் அளிக்கக்கூடியதாக அமையும். - நெல்லையப்பர்தீக்காய சிகிச்சை பிரிவு துறை தலைவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை.