உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிக்னலை மதிக்காத பஸ் ஓட்டுனர் டூ - வீலரில் சென்ற பெண் உயிரிழப்பு

சிக்னலை மதிக்காத பஸ் ஓட்டுனர் டூ - வீலரில் சென்ற பெண் உயிரிழப்பு

கொரட்டூர்:சென்னை, கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன், 44. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி வித்யா, 35. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.நேற்று காலை 9:45 மணிக்கு, 'ஹோண்டா ஆக்டிவா' ரக, இரு சக்கர வாகனத்தில் தம்பதி இருவரும் பாடி பகுதிக்கு சென்றனர். அங்கு இறங்கிய மகேந்திரன், வேலைக்காக பேருந்தில் சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில், 200 அடி சாலை வழியாக வித்யா வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.கொரட்டூர் வடக்கு சாலை சந்திப்பில், வாகனங்கள் நின்று செல்வதற்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கை சிக்னல் போடப்பட்டிருந்தது. இதனால், வித்யா இருசக்கர வாகனத்தை மெதுவாக இயக்கினார்.அப்போது, கோயம்பேடில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்த தடம் எண்: 114 மாநகர பேருந்து, அதிவேகத்தில் வித்யாவின் வாகனத்தில் மோதியது. இதில், பேருந்து சக்கரத்தில் சிக்கி நசுங்கி சம்பவ இடத்திலேயே வித்யா உயிரிழந்தார்.இந்த நிலையில், சிக்னலை மதிக்காமல் விபத்து ஏற்படுத்திய பேருந்து டிரைவரை கைது செய்யக்கோரி, வித்யாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்த செங்குன்றம் போக்குவரத்து போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து ஏற்படுத்திய புழலைச் சேர்ந்த பேருந்து ஓட்டுனர் ரமேஷ்குமார், 47, என்பவரை கைது செய்தனர்.

தொடரும் விபத்துகள்

சென்னை நகரில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர், சிக்னல் விழுந்த பிறகும் வேகமாக செல்வது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறும் போது, அவர்கள் தடுத்து நிறுத்தி அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் எடுக்கின்றனர். ஆனால், மாநகர பேருந்துகள் விதிகளை மதிக்காமல் செல்லும் போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால், மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க நேரிடுகிறது. விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே, மாநகர பேருந்து ஓட்டுநர்கள் மீதும் விதிமீறல் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என, மற்ற வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கொளத்துார் முதல் கொரட்டூர் போலீஸ் எல்லை பகுதியில் 200 அடி சாலையில் 20 அடி அகலத்திற்கு, நடைபாதை கடைகள் மற்றும் கார் விற்பனையகங்களின் ஆக்கிரமிப்பு நிரந்தரமாகி விட்டன. இதனால், கொரட்டூர், கொளத்துார், ராஜமங்கலம், 200 அடி சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது. இதில், மாநகர பேருந்துகள் விதிமீறல்களும் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை