நகரமயமாக்கலால் பைபாஸ் சாலைகளில் பஸ் நிலையம்: அமைச்சர் நேரு
சென்னை:''நகரமயமாக்கல் காரணமாக பைபாஸ் சாலைகளில், புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன,'' என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பேசினார். சட்டசபையில் நடந்த விவாதம்: அ.தி.மு.க., - தேன்மொழி: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி பஸ் நிலையம் அடிப்படை வசதி இல்லாமல் உள்ளது. நெடுஞ்சாலையில்தான் பஸ்கள் நின்று செல்கின்றன. நவீன வசதிகளுடன், இந்த பஸ் நிலையத்தை மேம்படுத்தி தர வேண்டும். அமைச்சர் நேரு: அந்த பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் உள்ளதாக, அதிகாரிகள் எனக்கு குறிப்பு கொடுத்து உள்ளனர். விரிவாக்கம் செய்வதற்கு இடமில்லை என கூறியுள்ளனர். நகரமயமாக்கல் காரணமாக, பைபாஸ் சாலையில், புதிய பஸ் நிலையங்கள் கட்டப்படுகின்றன. அரசு நிலத்தை தேர்வு செய்து, எம்.எல்.ஏ., கொடுத்தால், அங்கு பஸ் நிலையம் கட்டப்படும். தி.மு.க., - ஜோசப் சாமுவேல்: அம்பத்துார் மாநகராட்சியில், 13 வார்டுகளில், 10 வார்டுகளில் மட்டும் பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு பணிகள் நடந்துள்ளன. மதனாகுப்பம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் இன்னும் பணிகள் துவங்கப்படவில்லை. அமைச்சர் நேரு: அதை பற்றிய விபரம் என்னிடம் இல்லை. பாதாள சாக்கடை அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதா என்றும் தெரியவில்லை. அ.தி.மு.க., - செல்வராஜ்: மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை சுற்றுப்பகுதிகளில் உள்ள பல ஊராட்சிகளுக்கு, பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வழங்கப்படுகிறது. கோடையில் நீர்மட்டம் குறைவதால், தண்ணீர் வழங்குவதற்கு திருப்பூர் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தில் முன்மொழியப்பட்டது. நிதி ஆதாரம் இல்லை என காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது. அமைச்சர் நேரு: கோவை, திருப்பூருக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து தான் தண்ணீர் எடுக்கப்படுகிறது. பில்லுார் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டத்தின் தடுப்பணை கட்டும் பணி பாதியில் இருந்தது. தற்போது பணி முடிந்துள்ளது. அந்த இடத்தை துார்வாரினால், அதிகமாக நீர் எடுக்க முடியும் என, அதிகாரிகள் கூறியுள்ளனர். இவ்வாறு விவாதம் நடந்தது.