பஸ் ஊழியர்கள் ஊதிய பேச்சு ஒத்திவைப்பு
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.போக்குவரத்து தொழிலாளர்களுக்கான, 15வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்த முதற்கட்ட பேச்சு, சென்னை குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்து கழகப் பயிற்சி மைய வளாகத்தில், கடந்த ஆக., 27ல் நடந்தது. இதில், 85 சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அடுத்தகட்ட பேச்சுக்கு அரசு அழைக்கவில்லை. இதை கண்டித்தும், ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தியும், தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன. அடுத்த மாதம் பொங்கல் பண்டிகை வர உள்ளது. எனவே, தொழிலாளர்களின் போராட்டங்களை தவிர்க்க, ஊதிய உயர்வு குறித்த பேச்சு இன்றும், நாளையும் நடக்கும் என, அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது; தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு காரணமாக, நேற்று நடக்கவிருந்த பேச்சு ரத்து செய்யப்பட்டது. நாடு முழுதும் ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளதால், பேச்சு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.