சென்னை மாநகர பஸ்கள் அதிகளவில் இயக்கப்படும் என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், காலை 11:00 மணி வரை, அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்யவில்லை. அதன்பின், மக்கள் தொடர்ந்து புகார் அளித்ததால், விடுமுறையில் வீட்டில் இருந்த ஓட்டுனர், நடத்துனர்களை அழைத்தனர். அவர்கள் தங்களின் பணிமனைகளுக்கு வர முடியாமல் கூட்டத்தில் சிக்கினர். தாமதமாக வந்த ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு, பணிமனை மேலாளர்கள், பஸ்களை வழங்காமல் அடாவடி செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த ஓட்டுனர்கள், நடத்துனர்கள் வாக்குவாதம் செய்தனர்.சில பணிமனைகளில், நேற்று இரவு பணி முடித்து ஓய்வெடுத்த ஓட்டுனர்கள், நடத்துனர்களை வைத்து, கூடுதல் பஸ்களை இயக்கினர். மெரினா கடற்கரைக்கு நேரடியாக பஸ்கள் செல்லாததால், கடற்கரையை ஒட்டிய அனைத்து சாலைகளிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.இதுகுறித்து, நடத்துனர் ஒருவர் கூறியதாவது:பொதுவாக ஞாயிற்று கிழமையில், பெண்களுக்கான இலவச டிக்கெட்டுகள் போக, ஒரு நடைக்கு, 500 ரூபாய் கூட வசூலாகாது. ஆனால், நேற்று சாதாரண பஸ்களில் கூட, 1,500 ரூபாய்க்கு மேல் டிக்கெட் வசூலானது. பயணியர், படிக்கட்டுகளில் தொங்கியபடி வந்தனர். பொதுவாக, விடுமுறை தினங்கள், ஞாயிற்று கிழமைகளில், 1,50 லட்சம் பேர் வரை, மெரினா கடற்கரைக்கு பஸ்சில் வருவர். நேற்று, அது நான்கு மடங்காக இருந்தது.இவ்வாறு அவர் கூறினார். தலைகளால் நிரம்பிய எம்.ஆர்.டிஎஸ்., நிலையங்கள்
வேளச்சேரி - சிந்தாதிரிப்பேட்டை வழித்தட ரயிலில் ஏறி, சேப்பாக்கம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட நிலையங்களில் மக்கள் இறங்கினர். இந்த ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை அடிப்படையில், 20 நிமிடங்களுக்கு ஒன்று என இயக்கப்பட்டதால், அனைத்து ரயில் நிலையங்களிலும் மக்கள் தலைகளாகவே காணப்பட்டது. வந்த ரயில்களில் ஏற இடம் கிடைக்காததால், ரயில் ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்கியபடி, இளைஞர்கள் ஆபத்தை அறியாமல் பயணித்ததையும் பார்க்க முடிந்தது. வழியை மறித்த வாகனங்கள்சாலைகளில் டூ வீலர், கார், குப்பை வண்டி, ஆம்புலன்ஸ், லோடு வேன்கள் என, அனைத்தும் சென்று, அங்கங்கே வழியை மறித்தபடி நின்றன. இதனால், குழந்தைகளுடன் சென்றோர், மிகுந்த அவதி அடைந்தனர். இளைஞர்கள், அருகில் உள்ள சுற்றுச்சுவர்களில் ஏறி ஆபத்தான முறையில் சாலைகளை கடந்தனர். ஆம்லன்ஸ் ஓட்டுனர்கள் அவதிசாலைகளில் கூட்டம் நிரம்பியதால், காரில் சென்றோர், நடு சாலையிலேயே கார்களை நிறுத்தி விட்டு நடந்து சென்றனர். இதனால், உடல்நலம் பாதிக்கப்பட்டோரை ஏற்றியபடி வந்த ஆம்புலன்ஸ்கள் வழி கிடைக்காமல் சைரன் ஒலித்தபடி நின்ற இடத்திலேயே நின்றன. இதையறிந்த இளைஞர்கள், நோயாளிகளை ஸ்ட்ரெச்சரில் வைத்து தலைக்கு மேல் துாக்கி சென்றனர். சில இடங்களில், மயக்கமடைந்த பெண்களை போலீசார் குண்டுக்கட்டாக துாக்கிச் சென்று, ஆம்புலன்ஸ்களில் ஏற்றினர். ***தாமதமாக விழித்த மெட்ரோ நிர்வாகம்நேற்று அதிகாலையில் இருந்தே, மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். அதேபோல, டிக்கெட்டுகளை, 'ஸ்கேன்' செய்யவும் நீண்ட வரிசையில் கூட்டம் காத்திருந்தது. இந்நிலையில், எட்டு நிமிடங்களுக்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டதால், ரயிலில், கதவுகளை ஒட்டி, குழந்தைகளுடன் பெண்களும் முதியோரும் நின்றனர். இதனால், கதவுகள் மூட முடியாமல், 'சென்சார்' தடை செய்தது. இதையடுத்து, பின்னால் வரும் ரயில்களில் ஏறும்படி அறிவிப்பு செய்தனர். ஆனாலும், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கூட்டம் குவிந்தது. இதையடுத்து, மதியத்துக்கு மேல், சென்னை ஆலந்துார் மெட்ரோ நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை, 'கட் சர்வீஸ்' ரயில்கள் இயக்கப்பட்டு, 3.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. வழக்கமாக, ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் பேர் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் நிலையில், நேற்று மாலை வரை மட்டுமே 4.50 லட்சம் பேர் பயணித்ததாக அதிகாரிகள் கூறினர்.