வணிகர் சங்க மாநாடு முதல்வருக்கு அழைப்பு
சென்னை:''சிறு வணிகர்களை பாதுகாக்க, சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்,'' என, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில், முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, தலைமைச் செயலகத்தில் அளித்த பேட்டி:தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில், மே 5ம் தேதி வணிகர் சங்க மாநில மாநாடு, மதுராந்தகத்தில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும்படி, முதல்வரை சந்தித்து அழைப்பு விடுத்துள்ளோம். வியாபாரிகளுக்கு தற்போதுள்ள இடர்பாடுகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை எடுத்துரைத்தோம். முதல்வர் பரிசீலித்து சாதகமாக அறிவிப்புகளை வெளியிடுவதாகக் கூறியுள்ளார்.கார்ப்பரேட் நிறுவனங்களால், சிறு வணிகர்கள் காணாமல் போய் கொண்டிருக்கின்றனர். அவர்களை பாதுகாக்க, சிறப்பு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரியுள்ளோம். அதற்கும் நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் தெரிவித்துள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.