உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாமா என பேசியது அநாகரிகம்: அண்ணாமலை பதிலடி

மாமா என பேசியது அநாகரிகம்: அண்ணாமலை பதிலடி

துாத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: 2026 சட்டசபை தேர்தலில் த.வெ.க., -- தி.மு.க., இடையேதான் போட்டி என விஜய் பேசியுள்ளார். அப்படி சொல்லவில்லை என்றால் அவர் கட்சி ஆரம்பித்ததில் அர்த்தம் இல்லாமல் போய்விடும். அதனால் அவர் அப்படி சொல்லி இருப்பதாகவே கருதுகிறேன். அனைத்து அரசியல் கட்சியினரும், தங்களின் எதிரி தி.மு.க.,தான் என சொல்கின்றனர். அது, மக்கள் மனநிலையை பிரதிபலிக்கிறது. விஜய் தன்னுடைய பலத்தை பற்றி பேசாமல், மற்றவர்களுடைய பலவீனத்தைப் பேசுகிறார். தமிழக மக்கள் கடந்த லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, 18 சதவீத ஓட்டுகளை அளித்துள்ளனர். அவர்கள், ஓங்கோலில் இருந்து வந்துவிடவில்லை. விஜய் கூட்டத்திற்கு மக்கள் வரலாம். வேடிக்கை பார்க்கலாம். ஆனால், ஓட்டுப் போடும்போது தீவிரமாக யோசித்துத்தான் ஓட்டளிப்பர். அப்போதுதான் தெரியும், வந்த கூட்டமெல்லாம் ஓட்டளிக்கும் வரை நீடிக்குமா என்பது. கச்சத்தீவு குறித்து, யாரோ எழுதி கொடுத்ததை வைத்து விஜய் மாநாட்டில் பேசியிருக்கிறார். ஆனால், அதற்கு முன் அவர் இதே கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, வேறு மாதிரி பேசியுள்ளார். ஆக, அரசியலுக்கு வந்ததும் ஒரு நிலைப்பாடு; அதற்கு முன் ஒரு நிலைப்பாடு. மொத்தத்தில், அவரும் மாற்றி மாற்றி பேசத் துவங்கி விட்டார். மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின் தான், நடுக்கடலில் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகும் தமிழக மீனவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. யார் புதிதாக அரசியலுக்கு வந்தாலும், பழைய சம்பவங்கள் குறித்து நன்கு படிக்க வேண்டும். அது விஜய்க்கும் பொருந்தும். ஆரோக்கியமான அரசியல் செய்வோம் என கூறிவிட்டு, மாநாட்டு மேடையில், முதல்வரை பார்த்து 'மாமா' என விஜய் பேசியிருப்பது அநாகரிகம். வார்த்தைகளை பொது இடத்தில் பயன்படுத்தும் போது, பக்குவமாக பேச வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி