எதுவுமே செய்யாத பழனிசாமி தி.மு.க.,வை விமர்சிக்கலாமா?
விழுப்புரம்:விழுப்புரத்தில் நடந்த, தெற்கு மாவட்ட தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர் பொன்முடி பேசியதாவது:வரும் சட்டசபை தேர்தலில், தமிழகம் முழுதும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க., வெற்றிபெற வேண்டும். கட்சி சார்பில் யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக நிறுத்தப்படலாம். யாராக இருந்தாலும் அவர், முதல்வர், துணை முதல்வர் கைகாட்டும் நபராகத்தான் இருப்பார். அதனால், எப்பாடுபட்டாவது அவர்களை வெற்றி பெற வைக்க கடுமையாக ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியப் பொறுப்பில் இருக்கும் எனக்கே கூட வரும் சட்டசபைத் தேர்தலில் சீட் கிடைக்காமல் போகலாம். அதற்காக வருத்தப்பட முடியாது. கட்சியில் யாருக்கும் சீட் உறுதி செய்யப்படவில்லை; அது நிரந்தரமும் இல்லை. கட்சித் தலைமை விருப்பம் எதுவோ, அது படிதான் எல்லாமே நடக்கும். அதை ஏற்க ஒவ்வொருவரும் பழக வேண்டும். தி.மு.க.,விலும் கோஷ்டிகளாக செயல்பட்டு, ஒருவருக்கு மற்றொருவரிடம் பிரச்னைகள் இருக்கலாம். அதையெல்லாம் தேர்தல் என்று வந்து விட்டால் மறந்து விட வேண்டும். மனக் கசப்புகளை துாக்கி எறிந்து, தேர்தல் பணியை மட்டும் செய்ய வேண்டும். தமிழக அரசின், மூன்றாண்டு கால சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இரு நாட்களுக்கு முன், தமிழகத்தில் பெய்த மழைக்கு தி.மு.க., அரசு சிறப்பாக செயலாற்றியுள்ளது. ஆனால், நாலரை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து, மக்களுக்கு எதுவுமே செய்யாத பழனிசாமி, தி.மு.க.,வை விமர்சிக்கிறேன் என வெற்று அரசியலுக்காக பொய் பேசுகிறார். தி.மு.க., செயல்பாட்டை விமர்சிக்கும் தகுதி துளிகூட அவரிடம் இல்லை. அவருடைய ஆட்சி காலத்தில், மழை மீட்பு பணிகளை முழுமையாக செய்ததுபோல் சொல்கிறார். அவர்களின் ஆட்சிகால சாதனையை சொல்வதற்கு எதுவும் இல்லாததால், தி.மு.க., மீது பிரச்னையை கிளப்பி விட்டு, தன் பக்கம் மக்களின் கோபப் பார்வை வராமல் பார்த்துக் கொள்கிறார். அதுமட்டுமல்ல, அ.தி.மு.க., பல கோஷ்டிகளாக பிரிந்துள்ளது. அதை மறைக்க யோசனை செய்தவர், மண்டையில் உதித்ததை வைத்து தி.மு.க.,வை விமர்சிக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.