மதுரை : சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக அரசு, இயந்திரங்களின் மதிப்பில் 15 சதவீத மூலதன மானியம் வழங்குகிறது. தமிழகத்தின் எந்த மாவட்டத்தில் நிறுவனம் இருந்தாலும், இயந்திரங்களின் மொத்த மதிப்பில் 15 சதவீதமும், அதிகபட்சமாக ரூ.மூன்றரை லட்சம் வரையும் மானியம் வழங்கப்படும். மதுரை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பின்தங்கிய பகுதிகளில் தொழில் துவங்கிய சிறு, குறு, நடுத்தர தொழில் உற்பத்தி நிறுவனங்கள், வேளாண் சார் உற்பத்தி நிறுவனங்களுக்கு 15 சதவீதம், அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். உற்பத்தி துவங்கிய மூன்றாண்டுகளுக்கு 20 சதவீதம், குறைந்த அழுத்த மின்மானியம் தரப்படுகிறது. மேலும் உற்பத்தி துவங்கிய ஆறாண்டுகள் செலுத்தும் மதிப்பு கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகையை, மாவட்ட தொழில் மையம் மானியமாக வழங்கும். பகுதி 1, பகுதி 2 க்கான சான்றிதழ் நகல், நிறுவன பங்குதாரர் மற்றும் கட்டடத்திற்கான பத்திர நகல், இயந்திரங்களுக்கான விலைபட்டியல் நகல், உற்பத்தி துவங்கிய நாள், வங்கிக் கடன் பெற்ற சான்றுகளுடன் அந்தந்த மாவட்ட தொழில் மையங்களை அணுகலாம். மதுரை மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மருதப்பன் கூறுகையில், ''மதுரையில் 11 வட்டாரங்களில் தொழில் துவங்க, மூலதன மானியம் தரப்படுகிறது. இதற்காக ரூ.80 லட்சம், மின்அழுத்த மானியத்திற்காக ரூ.எட்டு லட்சம், வாட் வரிக்காக ரூ.14 லட்சம் மானியம் தர, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.