தங்க கடத்தல் முறைகேடு சுங்க அதிகாரிகள் மீது வழக்கு
சென்னை: தங்க கடத்தல் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதியில் நடந்த முறைகேடு தொடர்பாக சென்னை விமான நிலைய சரக்கு கையாளும் பகுதியில் பணியாற்றிய சுங்க அதிகாரிகள் மீது சி.பி.ஐ.,யினர் வழக்கு பதிந்துள்ளனர். தங்க ஆபரணங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டவிரோத செயல்பாட்டால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதேபோல், நாடு முழுதும் பல்வேறு விமான நிலையங்களில் சமீபகாலமாக தங்க கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த கடத்தலுக்கும், ஏற்றுமதி, இறக்குமதி முறைகேடுகளுக்கும் சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சிலர், துணை போவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் தங்க நகை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு 2022ல் உதவியதாக சென்னை விமான நிலைய சரக்குகையாளும் பகுதியில் பணியாற்றிய சுங்கத்துறை அதிகாரிகள் மீது புகார் எழுந்தது. அந்த புகாரில் முகாந்திரம் இருப்பதை சி.பி.ஐ., அதிகாரிகள் உறுதி செய்தனர். இதையடுத்து ஆகஸ்ட் 30ம் தேதி மீனம்பாக்கம், கோயம்பேடு, பூக்கடை உட்பட ஆறு இடங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிலையில், முறைகேட்டுக்கு உதவியதாக சுங்கத்துறையை சேர்ந்த அதிகாரிகள் நான்கு பேர், தங்க நகை உரிமையாளர்கள், சுங்க ஏஜென்ட் உட்பட ஒன்பது பேர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இதில் தொடர்புடைய சுங்கத்துறை அதிகாரிகள் வெவ்வேறு மாநிலங்களில் பணியில் உள்ளனர். இவர்களை சென்னை அழைத்து வந்து சி.பி.ஐ.,யினர் விசாரிக்க உள்ளனர்.