வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ள துறை மிகவும் சிறப்பாக செயல்படுகின்றது.
சென்னை : கொள்ளையர்களிடம் நகை, பணத்தை இழந்தவரிடம் பணம் பறித்த, போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் மீது, நீதிமன்ற உத்தரவின்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.திண்டுக்கல் பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா; மெக்கானிக்கல் இன்ஜினியர். இவர் தன் மனைவி பெயரில் உரிமம் பெற்று, 'துபாய் கருப்பையா பாரத் என்டர்பிரைசஸ்' என்ற பெயரில், 'பெட்ரோல் பங்க்' நடத்தி வருகிறார். இவரது வீட்டில், பிப்.,7 ம் தேதி மர்ம நபர்கள் புகுந்து, 80 சவரன் நகை, 3.23 லட்சம் ரூபாய் ரொக்கம், விலை உயர்ந்த கைகடிகாரம் மற்றும் பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர். இதுகுறித்து, கருப்பையா குடும்பத்தினர், திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல், காலம் தாழ்த்தினர். அத்துடன், நினைத்த நேரத்தில், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார், பணம் தராமல் தங்களின் வாகனங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் நிரப்பி உள்ளனர்.'குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைத்துள்ளது. அவர்களை தேடிச்செல்ல பணம் வேண்டும்' என்றும் கேட்டு வாங்கியுள்ளனர். இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், எஸ்.ஐ., அழகர்சாமி, இன்ஸ்பெக்டரின் கார் டிரைவரான, காவலர் வினோத் ஆகியோர், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, கொள்ளையர்களிடம் பணம் பொருளை இழந்தவரிடம், தொடர்ந்து பணம் பறித்துள்ளனர்.கடந்த மார்ச்சில், கருப்பையா வீட்டில் கொள்ளையடித்த நபர்கள் கைதாகி இருப்பதாக, இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் பேட்டி அளித்துள்ளார்.கருப்பையா அவரை சந்தித்த போது, 'உங்களுக்கு, 25 சவரன் நகை தான் கிடைக்கும். மற்ற நகைகள் மற்றும் கைகடிகாரங்கள் கிடைக்காது. பறிமுதல் செய்த நகைகளை ஆய்வு செய்ததில், உங்கள் வீட்டில் இருந்த நகைகள் கவரிங் போல தெரிகிறது. நான் இந்த வழக்கை விசாரிக்க, லஞ்சமாக பெரும் தொகை தர வேண்டும்' என்று கூறியுள்ளார்.இதனால், அதிர்ச்சி அடைந்த கருப்பையா, இனியும் அவர்களிடம் சட்ட ரீதியான நடவடிக்கை எதிர்பார்க்க முடியாது என்று முடிவு செய்தார். இந்த வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட மூவர் மீதான புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரித்து, வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.அதை ஏற்று, சந்திரமோகன், அழகர்சாமி, வினோத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய, சென்னை ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை டி.ஜி.பி., அபய்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணையில், மூவரும் பணம் தராமல், தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பியதும், லஞ்சப்பணம் கேட்டு அட்டூழியம் செய்ததும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ள துறை மிகவும் சிறப்பாக செயல்படுகின்றது.