உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனடா மஞ்சள் பருப்பு கொள்முதலில் ரூ.120 கோடி நஷ்டம் என வழக்கு

கனடா மஞ்சள் பருப்பு கொள்முதலில் ரூ.120 கோடி நஷ்டம் என வழக்கு

சென்னை : குறைந்த விலையிலுள்ள கனடா மஞ்சள் பருப்பை, அதிக விலைக்கு கொள்முதல் செய்யும், 'டெண்டர்' அறிவிப்பை ரத்து செய்ய கோரிய மனுவுக்கு, அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், ஆகஸ்ட் 23ல், 60,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதலுக்கான, 'இ- - டெண்டர்' அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதில், பருப்புகளை வினியோகிக்க தகுதியான நிறுவனங்கள் குறித்த விபரங்கள், கடந்த 10ல் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. டெண்டரில் தேர்வான நிறுவனங்கள், கடந்த 16ல் உறுதி கடிதத்தை பெற்றுள்ளன. பின், பருப்புகளை வினியோகிக்க துவங்கியுள்ளன. ஆனால், துவரம் பருப்பு விலையில், விலை குறைந்த கனடா மஞ்சள் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குறைந்த விலை கனடா மஞ்சள் பருப்பை, அதிக விலைக்கு வினியோகம் செய்ததன் வாயிலாக, கிலோ ஒன்றுக்கு, 25 ரூபாய் வரை நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும்.இதன் வாயிலாக, அரசுக்கு 120 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விலை மோசடி குறித்து, அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது. அந்த புகாரின்படி, லஞ்ச ஒழிப்பு துறை உரிய விசாரணையை நடத்தவில்லை. எனவே, டெண்டர் சட்டம் மற்றும் விதிகளுக்கு எதிராக உள்ள, ஆகஸ்ட் 23 டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர்கள் வி.பி.செங்கோட்டுவேல், எம்.வேல்முருகன் ஆஜராகினர். இதையடுத்து, மனுவுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு, அக்., 1க்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை