உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திரைப்படத்திற்கு ஆன்லைன் விமர்சனம் தடைக்கோரிய வழக்கு தள்ளுபடி

திரைப்படத்திற்கு ஆன்லைன் விமர்சனம் தடைக்கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை:திரைப்படங்கள் வெளியான நாளில் இருந்து, முதல் மூன்று நாட்களுக்கு, 'ஆன்லைன்' விமர்சனத்தை தடை செய்ய கோரிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'திரையரங்குகளில், திரைப்படங்கள் வெளியான, முதல் மூன்று நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனத்தை தடை செய்ய வேண்டும். ஏனெனில், எதிர்மறையான விமர்சனங்களால், படம் தோல்வியடைந்து நஷ்டம் ஏற்படுகிறது' என, கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:இங்கே நீதிபதிகள் குறித்து கூட, மக்கள் எதிர்மறையான விமர்சனங்களை கூறுகின்றனர். அதையெல்லாம் நம்மால் தடுக்க முடியாது. இவை கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. தயாரிப்பாளர்கள் நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே, எதிர்பார்க்க முடியாது. தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள், யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். விமர்சனங்களை முன்கூட்டியே முடக்க முயற்சிக்கக் கூடாது.இது தொடர்பாக, ஒரு உத்தரவை பிறப்பித்தாலும், அந்த உத்தரவை எவ்வாறு செயல்படுத்த முடியும். செயல்படுத்த முடியாத உத்தரவுகளை பிறப்பிப்பதில், எனக்கு நம்பிக்கை இல்லை. முழு உலகமும் சமூக ஊடகங்களின் பிடியில் உள்ளது. இதுபோன்ற கருத்துக்களை தடுப்பது சாத்தியமற்றது. ஒரு திரைப்படத்தை பற்றிய கருத்து, நபருக்கு நபர் மாறுபடும். எனவே, ஆன்லைன் விமர்சனத்தை தடை செய்வது, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான, அடிப்படை உரிமையில் தலையிடுவதற்கு சமம். வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி