நடைபயண பேரணி அனுமதி கோரி வழக்கு
சென்னை:திருச்சி - சென்னை நடைபயண பேரணிக்கு அனுமதி கேட்டு, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கம் தாக்கல் செய்த மனுவுக்கு, போலீஸ் தரப்பில் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த கல்வித்திட்ட சிறப்பு பயிற்றுனர்கள் சங்கத்தின் தலைவர் சேதுராமன் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், 1.20 லட்சம் மாற்றுத்திறன் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்திய புனரமைப்பு கவுன்சில் பிறப்பித்த வழிமுறைகளின்படி, மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க, பள்ளிகல்வித்துறையில், 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்; ஆனால், 1,600 சிறப்பு பயிற்றுனர்களே உள்ளனர். அவர்களுக்கும் பணி உத்தரவாதம் இல்லை.கடந்த 1998ல், எங்கள் சங்க உறுப்பினர்கள், சிறப்பு பயிற்றுனர்களாக நியமிக்கப்பட்டனர்; 22 ஆண்டுகளுக்கும் மேலாக பணி முடித்தும், சொற்ப தொகையை சம்பளமாக பெறுகின்றனர். அவர்களின் பணி வரன்முறை கோரி, அரசிடம் மனு அளித்தோம்; எந்த நடவடிக்கையும் இல்லை.அரசின் கவனத்தை ஈர்க்க, எங்கள் சங்க உறுப்பினர்கள், திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து, சென்னை தலைமை செயலகம் வரை, நடைபயண பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். 200 பேர் கலந்து கொள்ளும் இந்தப் பேரணி, வரும் 5 முதல் 19 வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, போலீஸ் பாதுகாப்பும், பேரணிக்கு அனுமதியும் கோரினோம்; எந்த நடவடிக்கையும் இல்லை. எங்களுக்கு அனுமதி வழங்க, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி நிர்மல்குமார் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.