உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தஞ்சை கோயிலில் இந்திரன் சன்னதியை திறக்க வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தஞ்சை கோயிலில் இந்திரன் சன்னதியை திறக்க வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை : தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் பூட்டி வைக்கப்பட்டுள்ள இந்திரன் சன்னதியை திறக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சின்ராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் மன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. இங்கு கிழக்கு கோபுரம் நுழைவு வாயில் உள்பக்கத்தில் மருத நில அரசன் இந்திரனுக்கு சன்னதி வைத்து ஆராதனை செய்தார் ராஜராஜசோழன். மக்களும் வழிபட்டனர். விழா எடுத்து கொண்டாடினர் என சிலப்பதிகாரம், மணிமேகலையில் சான்றுகள் உள்ளன. மத்திய தொல்லியல்துறையும் சான்று கூறுகிறது.இந்திரன் சன்னதி 40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. ஆராதனை நடைபெறவில்லை. சன்னதியை திறந்து காலை, மாலையில் பூஜை, வழிபாடு நடத்தக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.கோயில் தரப்பு: எட்டு திசை கடவுள்களில் 4 சிலைகள் சேதமடைந்துள்ளன. மற்ற 4 சிலைகள் இல்லை. இதில் இந்திரன் சிலையும் அடக்கம். எட்டு சிலைகளையும் நிறுவ அனுமதி கோரி மத்திய தொல்லியல்துறைக்கு தமிழக அறநிலையத்துறை 2008 ல் கடிதம் அனுப்பியது. அனுமதி வழங்கவில்லை.இவ்வாறு தெரிவித்தது.தமிழக தலைமைச் செயலர், அறநிலையத்துறை முதன்மைச் செயலர், தொல்லியல்துறை கமிஷனர், மத்திய தொல்லியல்துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அக்.21 க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
அக் 02, 2024 09:11

இந்த ஆட்சியில் கோயில் சிலைகள் உடைக்கப்படும் இல்லையே அகற்றப்படும் ஆனால் சாலைகளின் மத்தியில் அரசியல்வாதிகளுக்கு மேலும் மேலும் சிலைகள் அமைக்கப்படும் இதுதானய்யா திராவிட ஆட்சியின் பெருமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை