வங்கியில் நகை திருட்டு சி.பி.ஐ., வழக்குப்பதிவு
சென்னை:திருப்பூர் மாவட்டம், கேத்தனுார் எஸ்.பி.ஐ., வங்கியில், அடகு வைத்த நகைகள் திருடப்பட்டது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கேத்தனுாரில், எஸ்.பி.ஐ., வங்கியில் அடகு வைத்த நகைகள், நுாதன முறையில் திருடப்பட்டன. இது குறித்து, 2022ல் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளர் சேகர், நுாதன முறையில் நகைகளை திருடியது தெரிய வந்தது. இது தொடர்பாக, சேகர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, 144 சவரன் நகை, 19.80 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த நுாதன நகை திருட்டு தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.