உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 17,000 டன் கேழ்வரகு கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதி

தமிழகத்தில் 17,000 டன் கேழ்வரகு கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதி

சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு இலவசமாக அரிசி, கோதுமை வழங்கப்படுகின்றன. அவற்றுடன் சேர்த்து, கூடுதலாக கேழ்வரகு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நீலகிரி,தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு தலா, 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது.எனவே, தமிழக விவசாயிகளிடம் இருந்து, வரும் நவ., முதல் ஜன., வரை, 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்து தர, வாணிப கழகத்திற்கு மத்திய உணவு துறை அனுமதி அளித்துள்ளது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக, 100 கிலோவுக்கு, 4,290 ரூபாய் வழங்கப்பட உள்ளது. கேழ்வரகு அதிகம் விளையும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், அடுத்த மாதம் முதல் நேரடி கொள்முதல் நிலையங்களை துவக்கி, கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட உள்ளது.கடந்த சீசனில் கேழ்வரகு பயிரிட்ட விவசாயிகள், ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருந்த பிஸ்கட் தயாரிப்பு, ஊட்டச்சத்து மாவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு கேழ்வரகு வழங்கியதால், அரசுக்கு கிடைக்கவில்லை. எனவே, தமிழக கோரிக்கையை ஏற்று, கொள்முதலுக்கு வழங்கப்பட்ட மூன்று மாத அவகாசம், இந்தாண்டு ஆக., வரை நீட்டிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில், 17,000 டன் கொள்முதல் செய்ய அனுமதி அளித்ததில், 1,889 டன் கேழ்வரகு மட்டுமே கிடைத்தது. குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவின்டாலுக்கு, 3,846 ரூபாய் வழங்கப்பட்டது.இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த இரு ஆண்டுகளாகவே அரசு, விவசாயிகளிடம் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்கிறது. இந்த விபரம், பல விவசாயிகளுக்கு தற்போது தெரிந்திருப்பதால், வரும் சீசனில் அதிக கேழ்வரகு கொள்முதல் செய்யப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ