மத்திய அரசின் உதவி மானியங்கள் தமிழகத்திற்கு 30.64 சதவீதம் அதிகரிப்பு
சென்னை: 'மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட மொத்த உதவி மானியங்கள், நடப்பாண்டு மதிப்பிடப்பட்ட வரவுகளில், 30.64 சதவீதம் அதிகம்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக பட்ஜெட் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டு வரவு - செலவு திட்ட மதிப்பீடுகளில், மத்திய அரசின் நிதியுதவி திட்டங்கள் உட்பட, தமிழகம் பெறும் உதவி மானியங்கள், 23,834 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மதிப்பீடு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின், 'சமக்ரா சிக்ஷா' திட்டத்திற்கு மதிப்பிடப்பட்டு உள்ள, 3,952 கோடி ரூபாயை உள்ளடக்கியது. நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் வரை, மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட மொத்த உதவி மானியங்கள் 7,302 கோடி ரூபாய். இது, 2025 - 26ல் மதிப்பிடப்பட்ட வரவுகளில், 30.64 சதவீதம். இதை முந்தைய ஆண்டில் பெறப்பட்ட, 5,204 கோடி ரூபாயுடன் ஒப்பிடும் போது, 40.31 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டுக்குரிய உதவி மானியங்களை, கடந்த ஆண்டிலேயே விடுவிக்காமல் நிலுவையில் வைத்து, தாமதமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மத்திய அரசு விடுவித்ததால், நடப்பு நிதியாண்டில் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட உதவி மானியங்களின் வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.