மாணவர் சேர்க்கையை அதிகரித்த பள்ளிகளுக்கு நாளை பாராட்டு சான்றிதழ்
கோவை: 'தமிழக அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்த பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. கடந்த 2024 - 25ம் கல்வியாண்டை ஒப்பிடும்போது, நடப்பு கல்வியாண்டில் குறைந்தது 50 மாணவர்களை கூடுதலாக சேர்த்துள்ள 184 அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப் படவுள்ளது. சென்னையில் 26க்கும் மேற்பட்ட பள்ளிகள், கோவையில் 13, செங்கல்பட்டில் 10 பள்ளி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பாராட்டு விழா, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில் நாளை நடைபெறுகிறது. தேர்வு செய்யப்பட்ட அனைத்து பள்ளி தலைமையாசிரியர் களும் விழாவில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்ததாக செங்கல்பட்டு, கோவை, அதிக மாணவர் சேர்க்கை பெற்ற மாவட்டங்களாக உள்ளன. தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் கூடுதல் மாணவர் சேர்க்கை விபரம்: சென்னை - 1,870, அரியலுார் - 534, கோவை - 914, கடலுார் - 233, செங்கல்பட்டு - 972, தர்மபுரி - 149, ஈரோடு - 307, காஞ்சிபுரம் - 189, கரூர் - 162, கிருஷ்ணகிரி - 580, கள்ளக்குறிச்சி - 656, மதுரை - 303, நாகப்பட்டினம் - 473, நாமக்கல் - 535, பெரம்பலுார் - 97, புதுக்கோட்டை - 243, ராமநாதபுரம் - 463, ராணிப்பேட்டை - 56, சேலம் - 402, சிவகங்கை - 459, தஞ்சாவூர் - 258, நீலகிரி - 67, தேனி - 248, திருப்பூர் - 614, திருச்சி - 792, திருவள்ளூர் - 112, திருவாரூர் - 52, துாத்துக்குடி - 234, திருநெல்வேலி - 806, தென்காசி - 324, திருவண்ணாமலை - 563, திருப்பத்துார் - 672, வேலுார் - 51, விழுப்புரம் - 210, விருதுநகர் - 256.