சாலைகளே தெரியாத அளவுக்கு பனிமூட்டம்; சென்னையில் ரயில்கள் வருகையில் தாமதம்
சென்னை: சென்னையில் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில்கள் வருகையில் தாமதம் நிலவியது. தமிழகத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியதன் எதிரொலியாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. நகரின் முக்கிய பகுதிகளான பிராட்வே, எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் கடும் பனிமூட்டம் நிலவியது. அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. சாலைகளே தெரியாத அளவுக்கு புகை போல பனி படர்ந்ததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் சென்றனர். கடும் பனிமூட்டம் எதிரொலியாக சென்னையில் ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. சேரன் எக்ஸ்பிரஸ், நெல்லை, முத்துநகர் ரயில்கள் பனிமூட்டம் காரணமாக 20 நிமிடங்கள் தாமதமாக சென்னை வந்தடைந்தன. புறநகரிலும் மின்சார ரயில்கள் சேவையில் பாதிப்பு காணப்பட்டது.