சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2வது கட்டம்: சுரங்கப்பாதை பணி நிறைவு
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் -2 வழித்தடம் 4-ல் பெலிகன் என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து கோடம்பாக்கம் நிலையத்தை வந்தடைந்தது.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கை:சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 4-ல் 'பெலிகன்' என்றழைக்கப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரம், பனகல் பூங்கா நிலையம் மற்றும் மீனாட்சி கல்லூரிக்கு அருகில் உள்ள கோடம்பாக்கம் சாய்வுதளம் ஆகியவற்றுக்கு இடையேயான சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக, இதற்கு இணையாக அமைக்கப்பட்ட மற்றொரு சுரங்கப் பாதையின் பணியை, 'மயில்' எனப்படும் சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஜூலை 23, 2025 அன்று முடித்தது. இந்த இரண்டு நிகழ்வுகளின் மூலம், இந்த முக்கியமான வழித்தடத்தில் (Up and Down) செல்லும் இரட்டைச் சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.சுரங்கம் தோண்டும் இயந்திரம் பெலிகன், மார்ச் 1, 2024 அன்று தனது ஆரம்பகட்டப் பணியைத் தொடங்கியது. பின்னர், மே 14, 2024 முதல் பிரதான சுரங்கம் தோண்டும் பணியைத் துவங்கியது. பெலிகன் 594 நாட்களில், மொத்தம் 2076 மீட்டர் தூரத்திற்குச் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை முடித்துள்ளது. பனகல் பூங்கா மற்றும் கோடம்பாக்கம் இடையிலான இந்த சுரங்கப்பாதை பிரிவு 2ம் கட்டத்தின் மிகவும் நீளமான சுரங்கப்பாதை பிரிவாகும். பெலிகன் இயந்திரம், சென்னையில் நிலத்தடியில் உள்ள சவாலான கடினமான சூழ்நிலைகளை வெற்றிகரமாகக் கடந்து, இன்று (அக்டோபர் 15) தனது இறுதி இலக்கை அடைந்துள்ளது. சுரங்கப்பாதையின் இந்த வழித்தடம் (Chainage 7266.09 முதல் 9342.29 வரை) கோடம்பாக்கத்தில் உள்ள இந்திய ரயில்வே தண்டவாளத்தின் அடியில் அதன் மிக ஆழமான பகுதியைக் கொண்டுள்ளது. இங்கே, சுரங்கப்பாதையின் அடிப்பகுதி சுமார் -31.40 மீட்டர் ஆழத்தில் உள்ளது. இதுஇந்த வழித்தடத்திலேயே மிக ஆழமான பகுதிகளில் ஒன்றாகும்.இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், பொது மேலாளர் ரங்கநாதன் (கட்டுமானம்), பொது ஆலோசகர் நிறுவனத்தின் குழுத் தலைவர் முருகமூர்த்தி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஐடிடி சிமென்டேஷன் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.இந்தச் சுரங்கப்பாதை அமைக்கும் பணி பல பெரிய பொறியியல் சவால்களை எதிர் கொண்டது. கலப்பு மற்றும் பிளவுபட்ட பாறை அமைப்புகளுக்குள் சுரங்கம் தோண்டுதல், பல மாடிக் கட்டிடங்கள் நிறைந்த, மிகவும் நெருக்கமான நகர்ப்புறப் பகுதிக்கு அடியில் செல்லுதல், கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் பயன்பாட்டில் உள்ள இரண்டு மேம்பாலங்களுக்கு அடியில் மிகக் கவனத்துடன் கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. சுரங்கப்பாதையை 206 மீட்டர் ஆரம் கொண்ட ஒரு மிகவும் இறுக்கமான எஸ் வடிவ வளைவில் இயக்க வேண்டியிருந்தது. மேலும், திட்டத்திலேயே மிகவும் செங்குத்தான சுரங்கச் சாய்வை (+2.581%) கையாள வேண்டியிருந்தது. இவ்வளவு சிக்கலான சவால்கள் இருந்தபோதிலும், திட்டக் குழுவினர் சிறந்த தொழில்நுட்பத் திறமை, சிறந்த திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு, இந்த மைல்கல்லை பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் முடித்து சாதனை செய்துள்ளனர்.இவ்வாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது.