சிதம்பரம் நடராஜர் கோவில் நிலம்; விற்பனை ஆதாரங்கள் தாக்கல் செய்கிறது அறநிலையத்துறை
சென்னை : 'பொது தீட்சிதர்களால், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் விற்கப்பட்டது குறித்த கூடுதல் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹிந்து அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.'மாநில நிபுணர் குழுவின் ஒப்புதல் பெறாமல், சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரங்களை சுற்றி, எந்த கட்டுமானங்களையும் மேற்கொள்ள, பொது தீட்சிதர் குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்; பொது தீட்சிதர்களின் தவறான நிர்வாகத்தால், கோவில் வருவாய் குறைந்துள்ளது.வரவு - செலவை தணிக்கை மேற்கொள்ள கணக்குகளை சமர்ப்பிக்கும்படி, பொது தீட்சிதர் குழு செயலருக்கு உத்தரவிட வேண்டும்' என, அறநிலையத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை, பொது தீட்சிதர்கள் விற்றதாக, அறநிலையத் துறை தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து, பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆட்சேப மனு தாக்கல் செய்யப்பட்டது.பொது தீட்சிதர்கள் குழு சார்பில், வழக்கறிஞர் ஹரிசங்கர் வாதாடியதாவது:கோவில் நிலங்கள் விற்கப்பட்டது குறித்து, சம்பந்தப்பட்ட பொது தீட்சிதர்களின் வாரிசுகளிடம் விசாரிக்கப்பட்டது. அப்போது, அந்த சொத்துக்கள் எல்லாம் தாங்கள் சொந்தமாக சம்பாதித்தவை என்று, அந்த தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர். கோவிலுக்கு சொந்தமான 2,000 ஏக்கர் நிலங்கள், தீட்சிதர்களால் விற்கப்பட்டதாக அறநிலையத் துறை குற்றஞ்சாட்டியது. ஆனால், 20 ஏக்கர் நிலங்களுக்கான விற்பனை ஆவணங்களை மட்டுமே அறநிலையத் துறை தாக்கல் செய்துள்ளது.இவ்வாறு அவர் வாதாடினார்.அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''சுவாதீன உரிமை பெற்றவர் எழுதிய உயில் அடிப்படையில், குறிப்பிட்ட தீட்சிதர், அந்த நிலத்தை விற்றுள்ளார். ஆனால், நிலத்தின் பட்டா இன்னும் கோவிலின் பெயரில் தான் உள்ளது. ''கோவில் நிலங்களை சட்ட விரோதமாக மூன்றாம் நபர்களுக்கு பொது தீட்சிதர்கள் விற்றது குறித்த கூடுதல் ஆதாரங்களை, அறநிலையத் துறை தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறது,'' என்றார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கோவில் நிலங்கள் சட்டவிரோதமாக விற்றது குறித்த கூடுதல் ஆதாரங்களை, ஆன்லைனில் தாக்கல் செய்யலாம்.கோவிலின் வரவு - செலவு கணக்கு விபரங்கள் குறித்த வரைவு திட்டத்தை, பொது தீட்சிதர்கள் தரப்பு தாக்கல் செய்ய இரண்டு வாரம் அவகாசம் வழங்கப்படுகிறது.கோவிலின் கட்டளைகளில், எத்தனை கட்டளைகள் தற்போது செயல்படுகின்றன; எத்தனை செயல்படவில்லை; கட்டளை தீட்சிதர்களின் பெயர், முகவரி, ஊர் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து, பொது தீட்சிதர்கள் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வரும் 19க்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.