அறிவியல் பூர்வ விசாரணைக்கு முதல்வர் அறிவுறுத்தல்
சென்னை:'காவல் துறையினர், அறிவியல் பூர்வ விசாரணையில், அதிக கவனம் செலுத்த வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.சென்னை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள, காவலர் உயர் பயிற்சியகத்தில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 24 டி.எஸ்.பி.,களின் ஓராண்டு பயிற்சி அணிவகுப்பு நிறைவு விழா நேற்று நடந்தது.பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார். புதிய டி.எஸ்.பி.,க்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். நிகழ்ச்சியில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், ''காவலர்கள், பொது மக்களிடம் கனிவாக, பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் குறைகளை கவனமாக கேட்டு, நியாயமான, நேர்மையான சேவையை வழங்க வேண்டும்.''காவலர்கள் உயர் தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அதில், 'அப்டேட்' ஆகிக்கொள்ள வேண்டும். அறிவியல் பூர்வ விசாரணையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.