சென்னை:“சுயசார்புடனும், தனித்துவமான அடையாளங்களுடனும் ஒவ்வொரு மாநிலமும் செழித்து வளரும்போது தான் ஒன்றுபட்ட வலிமையான இந்தியா, உலக அரங்கில் உயர்ந்து நிற்கும்,” என முதல்வர் ஸ்டாலின் பேசினார். சுதந்திர தினத்தையொட்டி, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில், தேசியக் கொடியேற்றி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அனைவருக்குமான இந்தியாவாக நம் நாடு இருக்க வேண்டும் என, நம் தலைவர்கள் கனவு கண்டனர். அதை நிறைவேற்றுவது தான், அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான புகழஞ்சலி. முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு, 'காக்கும் கரங்கள்' திட்டத்தை, வரும் 19ம் தேதி துவக்கி வைக்க உள்ளேன். இத்திட்டத்தின் கீழ், 348 முன்னாள் படை வீரர்களுக்கு, 30 சதவீத மானியத்தில், தொழில் முனைவோருக்கான கடன் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி, 14 ஆண்டுகளுக்கு பின், 11.9 சதவீதமாக அதிகரித்து உச்சத்தை தொட்டுள்ளது; இது, வேறு எந்த மாநிலமும் பெற்றிராத வளர்ச்சி. நாட்டின் வளர்ச்சியே, 6.5 சதவீதம் தான். இது, எங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்த மக்களுக்கு கிடைத்த வெற்றி. மக்களின் தேவைகளை உணர்ந்து, அவர்கள் கேட்பதற்கு முன்னதாகவே, அதை நிறைவேற்றி தரும் அரசாக, தி.மு.க., அரசு உள்ளது. ஒன்றுபட்ட வலிமையே நாட்டின் வல்லமை. வரலாற்று சாசனத்தில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து, மக்கள் பணியாற்ற தேவையான அதிகார பகிர்வு, தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகார பகிர்வில், மாநில அரசு களின் பங்கு, தொடர்ந்து குறைந்து வருவது வருத்தம் அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு துறைகளில், மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் முயற்சிகளை, மத்திய அரசு செய்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற, மக்களுக்கு அருகில் இருந்து செயல்பட, மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் தேவைப்படுகின்றன. இதற்கு நேர்மாறாக கல்வி, மருத்துவம் போன்ற முக்கிய துறைகளில், மாநில அரசுகளின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுகின்றன. சட்டங்கள் வாயிலாகவும், நீதிமன்ற தீர்ப்புகளாலும், மாநில அரசுகளுக்கான நிதி பங்கீட்டிலும், திட்டங்களிலும், மத்திய அரசு காட்டும் பாரபட்சத்தாலும், மத்திய அரசை சார்ந்து இருக்கும் தொடர்ச்சி 16ம் பக்கம் நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை களைவதற்கு, மாநில அரசுகளின் பங்கை மீட்டெடுக்க, அரசியல் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதுதான் ஒரே தீர்வு. இதற்கான முன்முயற்சிகளை நிறைவேற்றி முடிப்பதற்கான தருணம், தற்போது வந்துவிட்டது. மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை, எப்போதும் போராடி, வாதாடி வழக்கு போட்டு பெற வேண்டிய நிலைமையில் இருப்பது, கூட்டாட்சி இந்தியாவிற்கு அழகல்ல. இது, மாநிலத்தின் வளர்ச்சியையும், நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும். சுயசார்புடன், தனித்துவமான அடையாளங்களுடன் ஒவ்வொரு மாநிலமும் செழித்து வளரும் போதுதான், ஒன்றுபட்ட வலிமையான இந்தியா, உலக அரங்கில் உயர்ந்து நிற்கும். அதற்கு, தமிழகம் எப்போதும் துணை நிற்கும். தமிழகத்தின் உன்னதமான கோட்பாடுகளை, நாட்டின் முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும், பொறுப்பும் நமக்கு உண்டு. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் காலை 8:48 மணிக்கு, கோட்டை கொத்தளத்திற்கு வந்தார். அவரது காரின் முன், போலீசார் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து வந்தனர். முதல்வரை தலைமைச் செயலர் முருகானந்தம் வரவேற்றார். தென் மாநில பகுதிகளின் தலைமை படைத்தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் வி.ஹரி, தமிழகம் - புதுச்சேரி கடற்படை பகுதியின் கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் சதீஷ் எம்.ஷெனாய், தாம்பரம் வான்படை தலைமை நிலைய அதிகாரி ஏர் கமோடோர் தபன் சர்மா, கடலோர காவல்படை மாவட்ட கமாண்டர் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பாலகிருஷ்ணன், தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் ஆகியோரை, முதல்வருக்கு தலைமைச் செயலர் அறிமுகம் செய்து வைத்தார். தேசியக்கொடி ஏற்றிய பின், காவல் துறையின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்றுக் கொண்டார். முன்னாள் படைவீரர்கள் ரூ.22 கோடியில் தங்கும் விடுதி சென்னை:“தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் வசதிக்காக, சென்னை மாதவரத்தில், 33,000 சதுர அடி பரப்பளவில், உள்கட்டமைப்புடன் கூடிய தங்கும் விடுதி, 22 கோடி ரூபாயில் கட்டப்படும்,” என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். சுதந்திர தின விழாவில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: * விடுதலை போராட்ட வீரர்களுக்கு, தற்போது வழங்கி வரும் மாத ஓய்வூதியம், 22,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் * விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு, தற்போது வழங்கப்படும் மாத குடும்ப ஓய்வூதியம் 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் * வீரபாண்டிய கட்டபொம்மன், ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, சிவகங்கை மருது சகோதரர்கள், வ.உ.சிதம்பரனார் வாரிசுகள் பெற்றுவரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம், 11,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் * இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற, தமிழகத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும், ஆயுட்கால மாத நிதியுதவி, 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் * இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற வீரர்களின் மனைவியருக்கு வழங்கப்படும், ஆயுட்கால மாத நிதியுதவி, 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் * தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் வசதிக்காக, சென்னை மாதவரத்தில், 33,000 சதுர அடி பரப்பளவில், உள்கட்டமைப்புடன் கூடிய தங்கும் விடுதி, 22 கோடி ரூபாயில் கட்டப்படும் * தமிழகத்தின் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் இலவச பஸ் பயணத்திட்டம், மாற்றுதிறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் * ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையம், மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி துவக்கப்படும் * தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில், பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள், கல்லுாரியில் படிக்கும்போது, திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பு பெற, நவீன தொழில்நுட்பங்களில், 10,000 மாணவர்களுக்கு, 15 கோடி ரூபாய் செலவில், இணையவழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு முதல்வர் அறிவித்தார். ***