வறுமையை ஒழித்து கம்பனின் கனவை நனவாக்கியுள்ளோம் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சென்னை:''தமிழகத்தை வறுமை இல்லாத மாநிலமாக மாற்றி, கம்பனின் கனவை நனவாக்கியுள்ளோம்,'' என, முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார். சென்னை கம்பன் கழகத்தின் சார்பில், பொலிவுமிகு பொன்விழா நிறைவு விழா, சென்னையில் நேற்று நடந்தது. கவிஞர் வைரமுத்துவுக்கு, ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின், 'கவிச்சக்கரவர்த்தி கம்பர்' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், பேராசிரியர் தெ.ஞானசுந்தரம், பழ.பழனியப்பன், பேராசிரியர் சாரதா நம்பிஆரூரான், ஆன்மிக பேச்சாளர் சுகி சிவம், இலங்கை ஜெயராஜ் ஆகியோருக்கு, கம்பன் கழகத்தின், 'இயற்றமிழ் அறிஞர்' விருதுகளும், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு, 'கம்பன் கலைநயச் செல்வர்' விருதும் வழங்கப்பட்டன. விருதுகளை வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கடந்த 1969ல், காரைக்குடியில் சா.கணேசன் நடத்திய கம்பன் விழாவிலும், 1999ல் சென்னையில் நீதிபதி இஸ்மாயில் நடத்திய கம்பன் விழாவிலும் கருணாநிதி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 'கம்பன் விழாவுக்கு வந்த என்னை ஆச்சரியத்துடன் பார்க்காதீர்கள். வால்மீகியின் பார்வை 'என்னை அழைத்தவர்களை ஆச்சரியத்துடன் பாருங்கள்' என்றார். நானும் அப்படித்தான். கம்பரின் தமிழுக்காகவும், ஜெகத்ரட்சகனின் அன்புக்காகவும் இங்கே வந்திருக்கிறேன். கம்ப ராமாயணத்தை மாறுபட்ட கோணத்தில் பார்த்தது, திராவிட இயக்கம். சில கருத்துக்களுக்காக விமர்சித்தாலும், அதன் தமிழுக்காக, கவிதைக்காகவும் பாராட்டிய இயக்கம். அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது தான், சென்னை மெரினா கடற்கரையில் கம்பருக்கு சிலை வைக்கப்பட்டது. அயோத்தி நகரின் பெருமையை சொல்லும் போது கூட, காவிரி நாட்டோடு ஒப்பிட்டவர் கம்பர். ராமரை அவதாரமாக காட்டுவது வால்மீகியின் பார்வை. ஆனால், சக்கரவர்த்தியின் மகனாக துவங்கி, கோசலை நாட்டு சக்கரவர்த்தியாக முடித்தது கம்பரின் பார்வை. அரசர்களின் பெயர்களை, தமிழில் மொழி பெயர்த்தவர் கம்பர். 'கம்பன் கண்ட சமரசம்' என்ற நுாலை எழுதிய நீதிபதி இஸ்மாயில், கம்பனின் தமிழில் சமூக ஒற்றுமையை கண்டார். நதிகள் பலவாக ஓடி வந்தாலும், அது வந்து சேர்வது கடலில்தான். அதுபோல வேறு வேறு கடவுள்கள் இருந்தாலும், நோக்கம் ஒன்று தான் என்ற பொருளில், பல பாடல்களை கம்பர் பாடியிருக்கிறார். உறுதியேற்போம் கடந்த 1989ல், கம்பன் கழக விழாவில் பேசிய கருணாநிதி, 'கம்பனின் கவிதைகளில் தீட்டிய கனவாம், வளம் கொழிக்கும் திருநாட்டை உருவாக்க உறுதியேற்போம்' என்று குறிப்பிட்டார். வறுமை இல்லாத, சமூக வளர்ச்சி குறியீடுகளில் முன்னணியாக, பொருளாதார வளர்ச்சி மிகுந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுதான் கம்பர் கண்ட கனவு. இத்தகைய மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவதும், கம்பருக்கு ஆற்றும் தொண்டுதான். இவ்வாறு அவர் பேசினார். சென்னை கம்பன் கழகத்தின் தலைவர் ஜெகத்ரட்சகன் எம்.பி., அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருது என்பது வெற்றியின் விலாசம் அல்ல
விருது என்பது வெற்றியின் விலாசம் அல்ல. விருது என்பது, என் துறையில், நான் இன்னும் பயணிக்க வேண்டும் என்பதன் அங்கீகாரம். எங்களுடன் நீ இருக்கலாம் என்பதன் அடையாளம். ஐந்து ஆண்டுகளுக்கு விருது வரவில்லை என்றால், இந்த சமூகம் நம்மை விட்டு சென்று விட்டதோ என்கிற எண்ணம் உண்டாகி விடும். சுகி சிவமும், நானும் கல்லுாரி காலங்களில் பல பேச்சு போட்டிகளில் பங்கேற்றுள்ளோம். அவர் விவேகானந்தா கல்லுாரியில் இருந்து பங்கேற்க வருவார். நான் பச்சையப்பன் கல்லுாரியில் இருந்து பங்கேற்பேன். அப்படி நடந்த போட்டிகளில், இரண்டு முறை அவர் என்னை வென்றுள்ளார். ஆன்மிக பணிகளில் அவர் வாரியார் ஆகவும் இருப்பார்; சமூகம் சார்ந்த சிந்தனைகள், மூடநம்பிக்கை ஒழிப்பு போன்றவற்றில், 'வாரியர்' ஆகவும், அதாவது போர் வீரனாகவும் இருப்பார். - கவிஞர் வைரமுத்து