உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய மற்ற மாநிலங்களும் குழு அமைக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய மற்ற மாநிலங்களும் குழு அமைக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:''மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய, தமிழகத்தைப் போல மற்ற மாநிலங்களும் உயர்நிலை குழு அமைக்க வேண்டும்,'' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். மத்திய - மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கம், தமிழக அரசின் சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில், மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட உயர்நிலை குழு தலைவர் குரியன் ஜோசப், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர் உட்பட பலர் பங்கேற்றனர். அதிக வருமானம் விழாவில், மத்திய -- மாநில உறவுகள் குறித்த உயர்நிலை குழுவின் இணையதளத்தை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மத்திய அரசு விதிக்கும் நேர்முக வரிகளிலும், ஜி.எஸ்.டி.,யிலும், மத்திய அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டும் மாநிலமாக தமிழகம் உள்ளது. ஆனால், மாநிலம் வழங்கும் வரி வருமானத்துக்கு ஏற்ப, மத்திய அரசு, தமிழக அரசுக்கு உரிய நிதி பங்கை வழங்காமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. ஜம்மு - காஷ்மீரை, மத்திய அரசின் நேரடியான ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியாக மாற்றி அறிவித்தனர். இது, ஜனநாயக விரோத, கூட்டாட்சியியலுக்கு எதிரான நடவடிக்கை. மாநிலங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படக்கூடாது என்பதற்காக, 50 ஆண்டுகளில், கூட்டாட்சிக்கு எதிராக நடந்த நிகழ்வுகளை ஆராய்ந்து, அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 1983ல் அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையில், 'இந்தியாவில் பொதுவாக பெருமளவில் அதிகார குவிப்பு நடந்து வருகிறது. அளவுக்கு மீறிய அதிகார குவியல்களால், மத்திய அரசுக்கு ரத்த கொதிப்பும், மாநில அரசுகளுக்கு ரத்த சோகையும் ஏற்பட்டுள்ளது' என தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த 2007ல் அமைக்கப்பட்ட பூஞ்சி கமிஷன், 'கட்சி சார்பற்ற முறையில் நடுநிலையாக செயல்படக்கூடியவர்களை தேர்ந்தெடுத்து, அந்தந்த மாநில முதல்வர்களிடம் கலந்தாலோசித்து, கவர்னர்களாக மத்திய அரசு நியமனம் செய்ய வேண்டும்' என்று கூறியது. இந்த ஆலோசனையை, மத்திய அரசு இன்று வரை ஏற்றுக் கொள்ளவில்லை. இதை, தமிழகத்தில் தற்போதைய கவர்னரின் செயல்பாடுகளை வைத்தே, நாம் தெரிந்து கொள்ள முடியும். இது போன்ற பல சட்டக் குறுக்கீடுகள், நிர்வாகக் குறுக்கீடுகள் வழியாக, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு தொடர்ந்து தொல்லை தரும் வகையில், பல தடைகளை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்திய ஒருமைப்பாட்டில் உண்மையான அக்கறை கொண்ட எல்லாரும், மாநில சுயாட்சி கொள்கைக்கு குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசு அமைத்த குழு போல, அனைத்து மாநிலங்களும் குழு அமைத்து, மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சம உரிமை கருத்தரங்கில், முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் பேசுகையில், ''அரசியலமைப்பு சட்டம் இல்லாமல், தேசியம் இல்லை. முதலில் அரசியலமைப்பு சட்டம் தான்; பின்னர் தான் தேசம். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். ''இங்கு, அரசியலமைப்பு சட்ட ரீதியாக கூட்டாட்சி தன்மை உண்டு. அரசு நிர்வாகத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சம உரிமை உள்ளது,'' என்றார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர் பேசுகையில், ''கடந்த 75 ஆண்டு களாக, இந்தியா ஒரு கூட்டமைப்பு என்று நம்புகிறோம்; அதில் எனக்கு சந்தேகங்கள் உள்ளன. ''நாட்டின் வனங்கள் ஏன் பொது பட்டியலில் இருக்க வேண்டும்; மாநிலங்களால் அதை நிர்வகிக்க முடியாதா? ஒரு மாவட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரிகளை, மத்திய அரசு தேர்வு செய்வதா? இது காலனித்துவ மரபு,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ