தற்செயல் விடுப்பு கிடையாது தலைமை செயலர் அறிவிப்பு
சென்னை:'அரசு ஊழியர்கள், தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதி கிடையாது' என, தலைமைச் செயலர் தெரிவித்து உள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.பி.எஸ் ., ஒழிப்பு இயக்கம் சார்பில், இன்று தற்செயல் விடுப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தலைமைச் செயலர் முருகானந்தம், அனைத்து துறை செயலர்கள், மாவட்ட கலெக்டர்கள், அனைத்து துறை தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: சில சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று ஒரு நாள் கூட்டு தற்செயல் விடுப்பு கோரியுள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சேவை சங்க விதிகளின்படி, உறுப்பினர்கள் கூட்டு தற்செயல் விடுப்புக்கு விண்ணப்பிக்க முடியாது. எனவே, அனைத்து மாவட்ட கலெக்டர்களும், துறை தலைவர்களும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலக பணியாளர்களின் வருகை நிலவரம் குறித்த அறிக்கையை, இன்று காலை 10:15 மணிக்குள், மனிதவள மேம்பாட்டு துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.