தமிழகத்திற்கான நிதியை பெற்று தாருங்கள்; வானதியிடம் முதல்வர் வலியுறுத்தல்
சட்டசபையில் நடந்த விவாதம்:பா.ஜ., - வானதி: தி.மு.க., அரசின் தவறுகளை பா.ஜ., சுட்டிக்காட்டினால், உங்கள் கட்சி ஆளும் மாநிலங்களை பாருங்கள் என்கிறீர்கள். அ.தி.மு.க., பேசினால், கடந்த காலங்களில் நடந்த அக்கட்சியின் ஆட்சியை பற்றி பேசுகிறீர்கள். பல்வேறு வரலாற்று காரணங்களால், நீண்ட காலமாக பின்தங்கியிருந்த வடமாநிலங்கள், இப்போது தான் வளர்ச்சி அடைந்து வருகின்றன. தமிழகம் நீண்ட நெடுங்காலமாகவே வளர்ந்த மாநிலம்.எனவே, தமிழகத்தை வளர்ந்த நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும்.முதல்வர் ஸ்டாலின்: வளர்ந்த நாடுகளுடன், தமிழகத்தை ஒப்பிட வேண்டும் என, வானதி பேசியதற்கும் அவரது பாராட்டுக்கும் நன்றி. அதேநேரத்தில், தமிழகத்திற்கு வர வேண்டிய மத்திய அரசின் நிதி வராமல் இருப்பதும் அவருக்கு தெரியும். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான், பள்ளிக்கல்வி துறைக்கு தர வேண்டிய நிதியை தருவோம் என, மத்திய கல்வி அமைச்சர் கூறுகிறார். இதற்காக பார்லிமென்டில் குரல் கொடுத்திருக்கிறோம். சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருக்கிறோம்.போராட்டம் நடத்தி வருகிறோம்.தயவுசெய்து, மத்திய அரசிடம் சொல்லி, தமிழகத்திற்கான நிதியை பெற்றுத்தர உரிமையோடு குரல் கொடுக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.