உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தேங்காய் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு; சர்வதேச நிலவரத்தால் தாக்கம்

தேங்காய் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரிப்பு; சர்வதேச நிலவரத்தால் தாக்கம்

கோவை: பிலிப்பைன்ஸில் உற்பத்தி பாதிப்பு, சர்வதேச சந்தையில் தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், தேங்காய் எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சமையலுக்கான கச்சா எண்ணெயின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதால், தேங்காய் எண்ணெய் விலை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து வருகிறது. தேங்காய் எண்ணெய் லிட்டர் ரூ.300 - ரூ.350 வரை விற்பனையாகிறது. இந்த விலை உயர்வில், சர்வதேச நிலவரம் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் உற்பத்தியில் முன்னணி நாடான பிலிப்பைன்ஸில் கடந்த ஆண்டு தேங்காய் உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ளது. எண்ணெய் உற்பத்தியும், 15 சதவீதம் சரிந்துள்ளது.'எல்நினோ பாதிப்பு, பருவநிலை மாற்றம், தென்னை மரங்களின் வயது அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தேங்காய் எண்ணெய் உற்பத்தியும் பாதித்துள்ளது. இது நடப்பாண்டிலும் தொடரும்' என, பிலிப்பைன்ஸ் தென்னை ஆணையம் தெரிவித்துள்ளது.

தேவை அதிகரிப்பு

ரஷ்ய - உக்ரைன் போரால், சூரியகாந்தி எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், உலக நாடுகள் மாற்று சமையல் எண்ணெயாக தேங்காய் எண்ணெய்க்கு மாறின. இது, தேவையை அதிகரித்துள்ளது.எனவே, உள்நாட்டு தேவை மற்றும் விலை உயர்வை சமாளிக்க, முக்கிய ஏற்றுமதி நாடுகளுள் ஒன்றான இந்தோனேசியா, தற்காலிகமாக தேங்காய் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், தேங்காய் எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.உலக சந்தையில் தேவை அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்தியும் பாதித்துள்ளது. குறிப்பாக, தமிழகம், கேரள எல்லையோர பகுதியில் தென்னையில் வாடல் நோய் தாக்கம் காரணமாக, உற்பத்தி குறைந்துள்ளது.எனவே, வரும் காலங்களிலும் தேங்காய் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என, தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கவனிக்கணும்!

வாடல் நோய் காரணமாக தேங்காய் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாமாயில், சோயாபீன், சூரியகாந்தி ஆகிய கச்சா சமையல் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை, மத்திய அரசு குறைத்துள்ளது. இவற்றின் மீதான அனைத்துக் கட்டணங்களையும் உள்ளடக்கிய இறக்குமதி வரி, 27.5ல் இருந்து, 16.5 சதவீதமாக குறையும். இதனால், சமையல் எண்ணெய் விலையும் குறையும். அதேசமயம், தேங்காய் உற்பத்தி இயல்பான நிலைக்கு மீளும் வரை தேங்காய் எண்ணெய் விலை சரியாமல் இருக்க, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சக்திவேல், செயலாளர்,தென்னிந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கம்

10 சதவீத வளர்ச்சி

@ இந்தியாவைப் பொறுத்தவரை, உலக அளவில் தேங்காய் எண்ணெய் ஏற்றுமதியில் முதன்மையான இடம் வகிக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், அமெரிக்காவுக்கு இந்திய தேங்காய் பொருட்கள் அதிகம் ஏற்றுமதியாகின்றன. 2021--2023ம் ஆண்டில் தேங்காய் மற்றும் அதுசார்ந்த பொருட்கள் ஏற்றுமதி, முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், 9.8 சதவீதம் உயர்ந்தது. ஆண்டுதோறும் சராசரியாக 10 சதவீத வளர்ச்சி பெற்று வருகிறது. 2023 நவ., முதல் 2024 நவ., வரையிலான காலகட்டத்தில் இந்திய தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி 12 சதவீதம் அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

M. PALANIAPPAN, KERALA
ஜூன் 02, 2025 14:47

தென் இந்தியாவில் தேங்காய் எண்ணெய் விலை நிர்ணயிப்பது காங்கேயம் மார்க்கெட், இல்லையா?


Amir Tha
ஜூன் 02, 2025 12:47

நியூஸ் போட்டு விலையை ஏத்து


kannan sundaresan
ஜூன் 02, 2025 11:40

கோவையில் ஒரு தேங்காயின் விலை ₹.12/-. 750 கிராம் எடை இருக்கும். உலக அளவில் எந்த அடிப்படையில் விலையை நிர்னயிக்கிறார்கள்.?


Kundalakesi
ஜூன் 02, 2025 16:36

நான் 20 தருகிறேன். 100 காய் அனுப்புங்கள்


Paramasivam
ஜூன் 03, 2025 15:42

என்ன உள்ளே இருந்தீரா???அதுசரி உள்ள இருந்தது நமக்கு எப்படி தெரியும்??? அதான் 12 ரூபாய்க்கு தேங்காய் கிடைக்கும் என்கிறாரே????


Srivilliputtur S Ramesh
ஜூன் 02, 2025 09:00

பாமாயில் எண்ணையில் கொழுப்புச் சத்து அதிகம். பாமாயில் இருதய நோய்களை வரவழைக்கும். எனவே, அதற்குப்பதிலாக, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணையை விநியோகிக்கலாம்.


K.Shanmuga Sundaram, Pollachi, cbe
ஜூன் 02, 2025 08:56

உலகத்திலேயே அதிகமா தென்னை மரம் இருக்கிறது பிலிப்பைன்ஸ் நாட்டில் தான். அப்புறம் இந்தோனேசியா. அந்த நாட்டுக்காரன் எடுக்கிற முடிவு உலகம் முழுவதும் தேங்காய் எண்ணெய் விலையை பாதிக்கும். விவரம் தெரியாம நம்ம ஊரு காரங்க இஷ்டத்துக்கு பேசுறாங்க


S.சங்கரநாராயணன், ஈரோடு
ஜூன் 02, 2025 08:50

அப்ப இந்த விலை உயர்வுக்கு காங்கேயம் சிண்டிகேட் காரணம் இல்லையா


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 02, 2025 08:41

இந்தியாவிலேயே தென்னைச் சாகுபடி நல்ல முறையில் நடக்கும் போது - குறிப்பாக தென்னக மாநிலங்களில் - சர்வதேச நிலவரத்தை நம்பியிருக்க வேண்டிய அவசியம் என்ன ?? புரியல ....


சமீபத்திய செய்தி