கரையும் ஊராட்சி, பேரூராட்சிகள்.. சாதகமா, பாதகமா! நகர்புற உள்ளாட்சிகளில் சேர்ப்பு
தமிழகத்தில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகளை ஏற்படுத்துவதுடன், ஏற்கனவே உள்ள நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுடன் அருகில் உள்ள ஊராட்சிகளை இணைத்து, எல்லையை விரிவுபடுத்தவும், நகராட்சி நிர்வாகத்துறை முடிவு செய்தது. கடந்த சில மாதங்களாகஅதற்கான பணிகள் நடந்தன. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வரும் டிச., மாதம் முடிவுக்கு வருகிறது. அதன்பின் அந்த உள்ளாட்சி அமைப்புகளை, மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோவை மாநகராட்சி மற்றும் கருமத்தம்பட்டி நகராட்சி, சூலூர் பேரூராட்சியுடன் இணைக்கப்பட உள்ள ஊராட்சிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.அதன்படி, சூலுார் ஒன்றியத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில், எட்டு ஊராட்சிகள் மற்றும் இரு பேரூராட்சிகள், கோவை மாநகராட்சி, கருமத்தம்பட்டி நகராட்சி, சூலூர் பேரூராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன. சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, நீலம்பூர், பட்டணம் ஆகிய ஊராட்சிகளும், இருகூர் மற்றும் பள்ளபாளையம் பேரூராட்சிகள், கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன. இதேபோல், கிட்டாம்பாளையம், செம்மாண்டாம்பாளையம், கரவழி மாதப்பூர் ஆகிய ஊராட்சிகள், கருமத்தம்பட்டி நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பேரூராட்சியாக உள்ள சூலூருடன், கலங்கல் ஊராட்சியை இணைத்து, நகராட்சியாக,தரம் உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பலம் இழக்கும் யூனியன்
சூலுார் ஒன்றியத்தில், தற்போது, 17 ஊராட்சிகள் உள்ளன. எட்டு ஊராட்சிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதால், சூலுார் ஒன்றியத்தில், ஊராட்சிகளின் எண்ணிக்கை ஒன்பதாக குறைய உள்ளது. பேரூராட்சிகளின் எண்ணிக்கை, ஐந்தில் இருந்து இரண்டாக குறையும். தாங்கள் ஊராட்சியாகவே தொடர, கிட்டாம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி நிர்வாகங்கள் கிராம சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றின. ஆனால், அதற்கு எந்த பலனும் இல்லை. மக்கள் தொகை மிக அதிகம் உள்ள கணியூர், அரசூர் ஊராட்சிகள் பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த ஊராட்சிகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. யூனியனில் ஊராட்சிகளின் எண்ணிக்கை குறைய உள்ளதால், பெரிய ஊராட்சிகள் இரண்டாக பிரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் என்ன சொல்கிறார்கள்?
நகர்புற உள்ளாட்சிகளுடன் இணைப்பதற்கு, பெரும்பாலான ஊராட்சி மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'அனைத்து ஊராட்சிகளிலும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தான் அதிகளவில் வசித்து வருகின்றனர். நகர்புற உள்ளாட்சியுடன் இணைப்பதால், வீட்டு வரி, சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் பல மடங்கு அதிகரிக்கும். அவற்றை சமாளிப்பது எப்படி என தெரியவில்லை. மத்திய அரசு நேரடியாக ஊராட்சிகளுக்கு வழங்கும் நலத்திட்டங்கள் எதுவும் இருக்காது. உள்ளூரிலேயே அதிகாரிகளை நேரில் சந்தித்து குறைகளை கூறி நிவாரணம் பெற்றோம். இனி அதுவும் இருக்காது. அனைத்துக்கும் கோவைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்' என்றனர்.