சென்னை : தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், மது பாட்டிலை, 'ஸ்கேன்' செய்யும், 'ஸ்கேனர்' கருவிகள் வைக்கும் பணி, இன்றுடன் முடிவடைவதால், அனைத்து மதுக்கடைகளும், 100 சதவீதம் கணினி மயமாகின்றன. மதுபான ஆலைகளில் இருந்து, மதுக்கடையில், 'குடி'மகன்களிடம் மது விற்பது வரை, அனைத்து செயல்பாடுகளையும், முழு கணினிமயமாக்கும் திட்ட பணியை, டாஸ்மாக் நிறுவனம், 2023 இறுதியில் துவக்கியது. திட்டச்செலவு, 293 கோடி ரூபாய். ஒப்பந்த பணிகளை, 'ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' நிறுவனம் மேற்கொள்கிறது. இத்திட்டத்தின் கீழ், மது ஆலைகள், மது பாட்டில் உற்பத்தி செய்த பின், அவற்றை ஸ்கேன் செய்ய, ஸ்கேனர் கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு மது பாட்டிலையும் தயாரித்து, அட்டை பெட்டிகளில் வைத்து, கிடங்குகளுக்கு அனுப்பும் போது, ஒவ்வொரு பெட்டியிலும், 'கியூ ஆர்' குறியீடு அச்சடிக்கப்பட்டு இருக்கும். அந்த குறியீடுகளில், பெட்டியில் உள்ள அனைத்து மது பாட்டில்களிலும் ஒட்டப்பட்டுள்ள கலால் ஸ்டிக்கர்களின் விபரம், கணினி வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மதுக்கடைக்கும், மொபைல் போன் வடிவில் சராசரியாக மூன்று - நான்கு ஸ்கேனர் கருவிகள், ஒரு பிரின்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த கருவியில் ஸ்கேன் செய்த பின் தான், மது பாட்டிலை விற்க வேண்டும். மொத்தம், 38 மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளில், 37ல் முழுதும் ஸ்கேனர் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள, மதுக்கடைகளில் கருவிகள் வைக்கும் பணி, இன்றுடன் முடிவடைவதால், 100 சதவீதம் கணினி மயமாக்கும் பணிகள் நிறைவடைகின்றன.இதனால், எந்த ஆலையில் இருந்து, என்னென்ன மது வகைகள், எந்த கடைக்கு, எப்போது அனுப்பப்பட்டது, மதுக்கடைகளில் விற்கப்பட்ட மது பாட்டில்கள், கடைகளில் உள்ள மது பாட்டில்கள் என, அனைத்து விபரங்களையும், துல்லியமாக டாஸ்மாக் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அதிகாரிகள், கணினி இணையதளத்தில் உடனுக்குடன் அறிய முடியும். இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மதுக்கடைகளில், 'கிரெடிட், டெபிட்' கார்டுகளை, 'ஸ்வைப்' செய்வது உள்ளிட்ட, 'டிஜிட்டல்' முறையில் பணம் வழங்கும் வசதி உள்ளது. கணினிமயமாக்கும் திட்டத்தை செயல்படுத்த, மதுபான ஆலை முதல் கடை ஊழியர்கள் வரை முட்டுக்கட்டை வந்தது. அவற்றை சமாளித்து, திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு உள்ளது. திட்டம் துவங்கும் போது, 2 சதவீதமாக இருந்த டிஜிட்டல் பணம் வசூல், தற்போது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.