சென்னையில் இன்று காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம்
சென்னை:தமிழக காங்கிரசில், 'ஆட்சியில் பங்கு வேண்டும்' என்ற கோஷம் எழுந்துள்ள நிலையில், அக்கட்சி மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம், இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடக்க உள்ளது.சமீபத்தில், ஆமதாபாத்தில் காங்கிரஸ் மாநாட்டில் எடுத்த தீர்மானத்தின்படி, 'அரசியலமைப்பை காப்பாற்றுவோம்' என்ற பிரசார இயக்கம், மக்கள் இயக்கமாக, நாடு முழுதும் நடத்தப்படுகிறது. பிரசார இயக்கம் தொடர்பாக, ஐந்து கட்டப் பணிகளை நடத்தி முடிக்க, டில்லி மேலிடம் மாநிலத் தலைமைக்கு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, முதல் கட்ட பணியாக, தமிழக காங்., செயற்குழுக் கூட்டம், நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட பணியாக, மே 4ல், சென்னையில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. மூன்றாம் கட்ட பணியாக, 77 மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. நான்காம் கட்ட பணியாக, 234 சட்டசபை தொகுதிகளிலும், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. ஐந்தாம் கட்ட பணியாக, வீடு, வீடாக மத்திய அரசின் மக்கள் விரோத செயல்கள் குறித்து, துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு, மக்களிடம் வினியோகித்து, திண்ணை பிரசாரம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக விவாதிக்க, இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், மாவட்டத் தலைவர்கள் கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் நடக்க உள்ளது. தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீடு குறித்து பேசும்போது, ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்ற கோஷம், அக்கட்சியில் எழுந்துள்ளது குறித்து ஆலோசிக்கவும் வாய்ப்பு உள்ளது.கட்சிப் பணிகளில், 36 மாவட்டத் தலைவர்கள் சரியாக செயல்படவில்லை என்ற புகாரை, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்நிலையில் தங்களை தலைவர் பதவியிலிருந்து மாற்றக்கூடாது என, அதிருப்தி மாவட்டத் தலைவர்கள் வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.