காங்.,கின் காழ்ப்புணர்ச்சிதான் காரணம் அம்பேத்கர் பிரச்னையில் வாசன் காட்டம்
''அரசமைப்புச் சட்டத்தை கொண்டாட வேண்டுமென்று முடிவெடுத்ததே, மத்திய அரசு தான். சட்ட மேதை அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்தவே, விவாதம் நடைபெற்ற நிலையில், அவரையே அவதுாறாக யாரால் பேச முடியும். இப்போது எழுந்துள்ள பிரச்னைக்கு காங்கிரசின் காழ்ப்புணர்ச்சி அரசியலே காரணம்,'' என த.மா.கா., ராஜ்யசபா எம்.பி., வாசன் கூறினார்.டில்லியில் அவர் அளித்த பேட்டி: அரசமைப்பு சட்டத்தின் 75ம் ஆண்டு விழாவை கொண்டாட வேண்டும் என்று முடிவெடுத்ததே மத்திய அரசுதான். சட்டத்தை யார் கொண்டு வந்தனரோ, அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்த வேண்டும் என்பதுதான், இதன் நோக்கம். அப்படியிருக்கும்போது, அம்பேத்கர் குறித்த தனது ஆக்கப்பூர்வமான செயல் திட்டத்துக்கு நேர்மாறாக, எப்படி ஒரு அரசால் அவதுாறாக பேசிட முடியும்?உண்மையில், இந்த பிரச்சனைக்கு காரணமே காங்கிரஸ் தான். அம்பேத்கர் எழுதிய அரசமைப்பு சட்டத்தின் வழிமுறைகளையும், நெறிமுறைகளையும், பல சமயங்களில் மடைமாற்றி, திசை திருப்பி, காற்றில் பறக்கவிட்டுள்ளது காங்கிரஸ். மத்தியில் இருக்கும் ஆளும்கட்சியை, எதிர்க்கட்சிகள் நியாயமான வகையில் எதிர்க்க முடியவில்லை. இதை, சமீப காலமக பார்லிமென்டில் அரங்கேற்றப்படும் பல காட்சிகளில் இருந்து உணர முடிகிறது. அம்பேத்கர் அவமதிக்கப்பட்டதாக கூறும் எதிர்க்கட்சிகள் வாதத்தில், எந்தவிதமான, நியாயமும் இல்லை. அம்பேத்கர், காந்தி, நேரு, சர்தார் படேல், நேதாஜி ஆகிய எல்லாருமே, நாட்டுக்காக உழைத்த மாபெரும் தலைவர்கள். இவர்களில் யாரைப் பற்றியும், பார்லிமென்டில் அவதுாறாக யாரும் பேச முடியாது. அப்படி இருக்கும்போது, பா.ஜ., தரப்பு மட்டும் அவர்களை எப்படி அவதூறாக பேச முடியும்?இவ்வாறு அவர் கூறினார். - நமது டில்லி நிருபர் -