உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 500 சதுர அடி மனைகளுக்கும் கட்டட அனுமதி கட்டுமான துறையினர் வலியுறுத்தல்

500 சதுர அடி மனைகளுக்கும் கட்டட அனுமதி கட்டுமான துறையினர் வலியுறுத்தல்

சென்னை:'குறைந்த பரப்பளவு மனைகளில், வீடு கட்ட அனுமதி வழங்குவதில், தமிழக அரசு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்' என, கட்டுமான துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில், 10,000 சதுர அடி வரையிலான குடியிருப்பு திட்டங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதல் வழங்கலாம். பொது கட்டட விதிகள் அடிப்படையில், இதற்கான அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், சிறிய அளவிலான குடியிருப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் பெற, பொது மக்கள் அதிக நாட்கள் காத்திருக்க வேண்டி இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, 2,500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி பரப்பளவு வரை கட்டடங்கள் கட்ட, சுயசான்று முறையில் கட்டட அனுமதி வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஏழு மாதங்களாக, இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.

அனுமதி

இதில், 800 சதுர அடிக்கு குறைவான பரப்பளவில் உள்ள மனைகளில், வீடு கட்ட அனுமதி வழங்குவதில்லை. இதனால், குறைந்த பரப்பளவு மனையில் குடியிருப்போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி. மணிசங்கர் கூறியதாவது: குடியிருப்பு திட்டங்களுக்கு, விரைவாக கட்டட அனுமதி வழங்க, அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. பொது கட்டட விதிகளின் அடிப்படையில், கட்டட அனுமதி பெற, குறைந்தபட்ச தகுதியாக, 840 சதுர அடி மனை இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் தொடர் கட்டட பகுதிகளில் மட்டும், குறைந்த பரப்பளவு நிலங்களில், கட்டட அனுமதி வழங்கப்படுகிறது.

அரசுக்கு வருவாய்

பிற இடங்களில், குறிப்பாக கிராம பகுதிகளில், 500, 400 சதுர அடி அளவுகளில் மனை வைத்துள்ளவர்கள், வீடு கட்ட அனுமதி பெற முடியாமல் தவிக்கின்றனர். இதில், சுயசான்று முறை போன்று, குறைந்த பரப்பளவு மனைகளுக்கு, குறிப்பிட்ட அடிப்படை ஆவணங்களை பெற்று, கட்டட அனுமதி வழங்க வேண்டும். இதனால், விதிமீறல் கட்டடங்களை தடுக்க முடியும். மேலும், அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், ஏழை மக்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, வீடு கட்டிக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். இது குறித்து தமிழக அரசு நல்ல முடிவை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் கூறுகையில், 'தற்போதைய நிலவரப்படி, நகர், ஊரமைப்பு சட்டத்தில் இதற்கு வழிவகை இல்லை. இதற்காக, பொது கட்டட விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்வது, சட்ட ரீதியாக சாத்தியப்படுமா என ஆலோசித்து வருகிறோம்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ