உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு

சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு

சென்னை : சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான கலந்தாய்வு, சென்னையில் இன்று துவங்குகிறது. தமிழகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் செயல்படும், சித்தா, யுனானி, ஹோமியோபதி அரசு மருத்துவ கல்லுாரிகளில், 330 இடங்கள் உள்ளன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50; மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு, 280 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இது தவிர, 30 தனியார் கல்லுாரிகளில், 1,980 இடங்களில், 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், மீதமுள்ள இடங்களில், 65 சதவீதம் மாநில அரசுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகிறது. அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, மாநில அரசு கலந்தாய்வு நடத்துகிறது. அரசு கல்லுாரிகளின், 15 சதவீத இடங்கள், அதாவது, 50 இடங்களுக்கு மட்டும், மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது. இந்த படிப்புகளில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கின்றனர். அவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, கடந்த 17ம் தேதி முதல் 26ம் தேதி வரை கலந்தாய்வு நடக்க இருந்தது. சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு, இன்று முதல் சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் நடக்க உள்ளது.இன்று சிறப்பு பிரிவினருக்கும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் கலந்தாய்வு நடக்கிறது. நாளை முதல் 29ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்க உள்ளது. மேலும் விபரங்களை, www.tnhealth.tn.gov.inஇணையதளத்தில் அறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி