அறுவை சிகிச்சையில் பெண் பலி; ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு
விழுப்புரம் : தவறான அறுவை சிகிச்சையால் இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.50 லட்சத்தை, சிகிச்சை அளித்த மூன்று டாக்டர்கள் வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த துறவிதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சார்லஸ் மகன் ரெமிஜியஸ்,28; இவரது மனைவி ஜெனிபர், 27. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டாகியும் குழந்தை இல்லாததால், கடந்தாண்டு ஜன. 26ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர்.அங்கு, ஜெனிபரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு கர்ப்பப்பை குழாயில் அடைப்பு உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்தால்தான் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறினர்.அதற்கு தம்பதி ஒப்புக் கொண்டதை தொடர்ந்து, ஜெனிபருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நீண்ட நேரமாகியும் ஜெனிபர் கண் திறக்காத நிலையில், ஜன. 27ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஜெனிபர் இறந்ததாக டாக்டர்கள் கூறினர்.ஆனால், ரெமிஜியுஸ் குடும்பத்தினர், டாக்டர்களின் தவறான சிகிச்சையால் ஜெனிபர் இறந்ததாக கூறினர். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த ஜூலை 15ம் தேதி விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கறிஞர்கள் ராஜசேகரன், ராமலிங்கம் ஆகியோர் மூலம் வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சதீஷ்குமார் மற்றும் உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர் நேற்று தீர்ப்பு கூறினர். அதில், அறுவை சிகிச்சையில் கவனக்குறைவாக செயல்பட்ட மூன்று டாக்டர்களும், இறந்த ஜெனிபரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டனர்.