கூட்டுறவு கோதுமை மாவு ஆன்லைனில் கிடைக்கும்
சென்னை: கூட்டுறவு துறை தயாரிப்புகளான, காஞ்சி கேழ்வரகு மாவு, காஞ்சி கோதுமை மாவு ஆகியவற்றை, 'பிளிங்கிட்' நிறுவனத்தின் வணிக தளத்தில் விற்பனை செய்யும் சேவையை, அமைச்சர் பெரிய கருப்பன் நேற்று துவக்கி வைத்தார். கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்களும், கூட்டுறவு பண்டகசாலைகளும் பல்பொருள் அங்காடிகளை நடத்துகின்றன. அவற்றில் கூட்டுறவு சங்கங்கள் தயாரித்த மளிகை, சமையல் எண்ணெய் உட்பட பல்வேறு நிறுவனங்களின் பொருட்கள் விற்கப்படுகின்றன. இந்த பொருட்களை, விரைவு வணிக தள நிறுவனங்கள் வாயிலாக, வாடிக்கையாளர் வீடுகளுக்கு நேரடியாக வினியோகிக்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது. தற்போது, காஞ்சிபுரம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தயாரிப்புகளான காஞ்சி பாசுமதி அரிசி 1 கிலோ, காஞ்சி கேழ்வரகு மாவு அரை கிலோ, காஞ்சி நாட்டு சர்க்கரை அரை கிலோ. காஞ்சி கோதுமை மாவு அரை கிலோ, கம்பு மாவு அரை கிலோ, கடலை மாவு 250 கிராம் ஆகியவை, விரைவு வணிக தளங்களில் விற்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, கா ஞ்சி கேழ்வரகு மாவு, காஞ்சி கோதுமை மாவு ஆகியவற்றை, 'பிளிங்கிட்' நிறுவனத்தின் விரைவு வணிக தளம் வாயிலாக விற்பனை செய்யும் சேவையை, சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத் தார்.