உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகத்தில் 40% அதிகரிப்பு

தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகத்தில் 40% அதிகரிப்பு

சென்னை: ''தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில், தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது,'' என, தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார்.சென்னை கிண்டி, காந்தி மண்டபத்தில் நேற்று நடந்த காந்தி ஜெயந்தி விழாவில், தமிழக கவர்னர் ரவி, காந்தி சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். பின், கதர் கண்காட்சியை பார்வையிட்டு, பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவ -- மாணவியருக்கு பரிசு வழங்கினார்; தியாகிகள், துாய்மை பணியாளர்களை கவுரவித்தார்.பின், கவர்னர் ரவி பேசியதாவது: காந்தியடிகளை பழமைவாதி என சிலர் கருதுகின்றனர். ஆனால், அவர் பழமைவாதி கிடையாது. தற்போதைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டியவற்றை, அவர் அப்போதே கூறியுள்ளார்.புதிய தொழில்நுட்பங்களுக்கு, பிற நாடுகளை சார்ந்து இருப்பதை தவிர்க்க, நம் நாட்டிலே அத்தொழில் நுட்பங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தியா யாரையும் சாராமல் இருக்க வேண்டும் என்பதை காந்தியடிகள் விரும்பினார். அதன்படி, அவர் விட்டுச் சென்ற பாதையை, தற்போது இந்தியா பின் தொடர்கிறது. நாட்டையே துாய்மையாக வைக்க வலியுறுத்திய காந்தியின் மண்டபம், மது பாட்டில்களை வீசும் இடமாக மாறியதை நினைக்கும்போது, மன வேதனை அடைகிறேன். சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆகியும், தலித் மக்களுக்கு எதிரான பாகுபாடு இன்னும் நீங்கவில்லை. இந்தியா முழுதும் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தாலும், தமிழகத்தில் தான் அதிகம் நடக்கிறது.மூன்று ஆண்டுகளில், தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள், 40 சதவீதம் அதிகரித்துள்ளன. தலித் மக்களை வீதிகளில் நடக்க அனுமதிப்பதில்லை. கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. பள்ளிகளில், அவர்கள் சமைத்த உணவுகளை, மாணவர்கள் உண்பதில்லை. அவர்கள் குடிக்கும் தண்ணீரில் கழிவுகளை கலப்பது போன்ற செய்திகள் வருகின்றன. கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களில், 60 பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பல குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஆனால், தலித்துக்கு எதிராக குற்றம் செய்பவர்களில், 50 சதவீதம் பேருக்கு தான் தண்டனை கிடைக்கிறது. இதை நினைத்து மன வேதனை அடைகிறேன். தமிழகத்தில் சமூக நீதி பேசுகின்றனரே தவிர, அதை இங்கு யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனைத்து சமூக நீதிகளும், எப்போது தலித் மக்களுக்கு கிடைக்கிறதோ, அப்போது தான் நாடு முழு சுதந்திரம் அடையும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VENKATASUBRAMANIAN
அக் 03, 2024 08:32

இதுதான் திராவிட மாடல் அரசின் சமூகநீதி. திருட்டு கும்பல் இப்படித்தான்.


N.Purushothaman
அக் 03, 2024 07:06

திருட்டு திராவிட ஆட்சியின் சமூக நீதி இன்றைக்கு அல்ல என்றுமே பட்டியலினத்தவருக்கு எதிரானது தான் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை