உள்ளாட்சி துாய்மை பணியாளர்களுக்கு, ஐகோர்ட் உத்தரவுப்படி குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மா.கம்யூ., சார்பில் நடத்தப்படும் தொடர் போராட்டங்களில், ஆயிரக்கணக்கில் துாய்மை பணியாளர்கள் திரளும் நிலையில், அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் துாய்மைப் பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு, குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும் என, ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில் கடந்தாண்டு, ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட், 'குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டது. உத்தரவை அமல்படுத்துவதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் இழுத்தடிப்பு செய்து வரும் நிலையில், சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன், குறைந்தபட்ச சம்பளத்தை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுத்துவிட வேண்டும் என்பதில், மா.கம்யூ., தொழிற்சங்கத்தினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து, நேற்று முன்தினம், திருப்பூர், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் துாய்மை பணியாளர்களை திரட்டி, மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், 8,000க்கும் மேற்பட்ட துாய்மை பணி யாளர்கள் கைதாகினர். ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க திருப்பூர் மாவட்ட செயலர் ரங்கராஜ் கூறுகையில், “அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, அடுத்த மாதம், சென்னை கோட்டையை நோக்கி துாய்மை பணியாளர்களை அழைத்துச் செல்வதென முடிவெடுத்துள்ளோம். ''கோர்ட் உத்தரவுப்படி, தொழிலாளர்களுக்கு உடனடியாக குறைந்தபட்ச ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார். - நமது நிருபர் -