உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது: வடமாவட்டங்களில் கனமழை அபாயம் விலகியது

 டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது: வடமாவட்டங்களில் கனமழை அபாயம் விலகியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வங்கக்கடலில் உருவான, 'டிட்வா' புயல் நகரும் வேகம் குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுவிழந்தது. இதனால், தமிழகத்தில் வடமாவட்டங்களுக்கான கனமழை அபாயம் விலகியது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக காரைக்காலில், 19 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவிலில் 17; நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையில் தலா, 15; சீர்காழி, திருவாரூர் பகுதிகளில் தலா, 14; ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், தொண்டி. நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் ஆகிய இடங்களில், தலா, 13; நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை, வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், கடலுார் மாவட்டம் சேத்தியாதோப்பு பகுதிகளில், தலா 12 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. 180 கி.மீ., தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய, 'டிட்வா' புயல், வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தமிழக வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளில் நிலவியது. புதுச்சேரிக்கு தென்கிழக்கே, 110 கி.மீ., மற்றும் வேதாரண்யத்துக்கு வடகிழக்கில், 140 கி.மீ., சென்னைக்கு தெற்கு, தென்கிழக்கில், 180 கி.மீ., தொலைவில், இந்த புயல் நிலை கொண்டிருந்தது. இது, தமிழக வட மாவட்டங்களுக்கு இணையாக, வடக்கு திசையில் நகர்ந்து கொண்டிருந்தது. வலுவிழக்கும் இதன் காரணமாக, தமிழகத்துக்கும், புயலுக்கும் இடைப்பட்ட தொலைவு, 30 கி.மீ., வரை குறையக்கூடும். இதனால், 'டிட்வா' புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது, பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 6ம் தேதி வரை, சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும், சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று சூறாவளிக்காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1.38 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்

'டிட்வா' புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில், 1.38 லட்சம் ஏக்கரில், நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன' என, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார். அவரது பேட்டி: 'டிட்வா' புயலின் நகர்வு குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கனமழை காரணமாக, நேற்று காலை வரை, துாத்துக்குடி, தஞ்சாவூரில் சுவர் இடிந்து விழுந்து தலா ஒருவர், மயிலாடுதுறையில் மின்சாரம் தாக்கி ஒருவர் என, மூன்று பேர் இறந்துள்ளனர். இதேபோல, 149 கால்நடைகள் மழை வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளன. கடலோர மாவட்டங்களில், 234 குடிசைகள் மற்றும் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மழை வெள்ள பாதிப்பு உள்ள மாவட்டங்களில், 38 இடங்களில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றில், 2,399 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 59,000; திருவாரூரில், 37,000; மயிலாடுதுறையில், 19,000 ஏக்கர் என மொத்தம், 1.38 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. மழை நீர் வடிந்த பின், அப்பகுதிகளில் ஆய்வு செய்து, பாதிப்பு நிலவரத்தை மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

காற்று முறிவால் பாதிப்பு!

இது குறித்து, தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் கூறியதாவது: இலங்கையின் நிலபரப்பில் இருந்து கடற்பரப்புக்கு வந்தது முதல், 'டிட்வா' புயலின் நகர்வு மற்றும் சுழற்சி வேகம் குறைந்தது. வங்கக்கடலின் மேல், வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்று முறிவு மற்றும் வறண்ட காற்று ஊடுருவலால், 'டிட்வா' புயல் பாதிக்கப்பட்டது. இதனால், அதில் எதிர்பார்த்த அளவுக்கு மழை மேகங்கள் உருவாகவில்லை. இதன் காரணமாக, 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்ட பகுதிகளில், அதிகனமழை பெய்யவில்லை. புயலின் தாக்கமும் படிப்படியாக குறைந்தது. வறண்ட காற்று ஊடுருவல் தொடரும் நிலையில், இந்த புயல் படிப்படியாக வலுவிழக்கும். அதேநேரம், சென்னை மற்றும் தமிழக வடமாவட்ட கடலோர பகுதிகளை நெருங்கி இணையாக நகரும் போது, மேற்கில் இருந்து வரும் காற்றின் தாக்கத்தால், புதிதாக மழை மேகங்கள் உருவானால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

gopi
டிச 01, 2025 06:44

காற்று முறிவு...வறண்ட காற்று ஊடுருவல்....என்னென்ன சொல்றாங்க பாருங்க...வானிலயை ஒழுங்கா ஆராய்ச்சி பண்ணுறாங்களோ இல்லையோ, ஆனால் புது வார்த்தைகளை நல்லா சொல்லி தராங்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை