குழந்தை முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமையால் பாதிப்பு: தே.மு.தி.க., பிரேமலதா குற்றச்சாட்டு
மதுரை : தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர் என தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா குற்றம்சாட்டினார்.மதுரையில் அவர் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார். அதற்கு பா.ஜ.,வும் பதில் கூறுகிறது. பிரச்னையில் இருந்து தப்பிக்க ஆளுங்கட்சி இவ்வாறு எதையாவது கூறி தப்பிக்க பார்க்கும். தமிழக அரசு மட்டும் என்ன செய்கிறது. அதிக கடனை வாங்கி குவிக்கிறது. கல்வி, விவசாயம் என அனைத்தும் கேள்விக்குறியாகி விட்டது. டெல்டா மாவட்டத்தினருக்கு முதல்வர் என்ன நிவாரணம் வழங்கினார். இது போன்ற சூழலில் சாக்கு போக்கு சொல்லி அவர் தப்பிக்க முடியாது.தமிழகத்தில் தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டது. இதுபோல 75 ஆண்டுகால கட்சி தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் கூட்டணி இன்றி தனித்து போட்டியிட முடியுமா. தமிழகத்தில் குழந்தை முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு மது, கஞ்சா காரணம். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.த.வெ.க., தலைவர் விஜய் எங்கள் வீட்டு பையன். சினிமா வேறு அரசியல் வேறு என அவரிடமே கூறியுள்ளேன். அவர் என்ன சாதிக்கப் போகிறார் என்பதை பார்க்க நாங்களும் காத்திருக்கிறோம். அறைக்குள் அமர்ந்து பேசுவதை விட வெளியே வந்து அவர் மக்களை சந்திக்க வேண்டும்.திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அரசியல் உள்ளது. மதம், ஜாதியை பிரித்து அரசியல் செய்ய பார்க்கின்றனர். ஹிந்து - முஸ்லிம் மக்களிடையே எந்தப் பிரிவும் இல்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற விஷயங்களை செய்வது அவர்கள் வழக்கம். இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.தமிழகத்தில் ஆளுங்கட்சி - கவர்னர் முறைத்துக்கொண்டிருப்பதால் மக்களுக்குதான் பிரச்னை. கனிம வளம் கொள்ளை, டாஸ்மாக், கஞ்சா, பாலியல் பிரச்னை, ஊழல், வேலை வாய்ப்பின்மையால் தி.மு.க., மீது மக்கள் கோபமாக உள்ளனர். தேர்தலுக்காக நீட் தேர்வு, மதப் பிரச்னையை கையில் எடுப்பர். இன்னும் பல பொய் வாக்குறுதிகளை கொடுப்பர் என்றார்.