உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாதுகாப்பற்ற குவாரிகளால் மரணம் எச்சரிக்கை பலகை வைக்க வழக்கு

பாதுகாப்பற்ற குவாரிகளால் மரணம் எச்சரிக்கை பலகை வைக்க வழக்கு

மதுரை:மதுரை மாவட்டம், மேலுார் பகுதியில் கைவிடப்பட்ட கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்து சீரமைக்க நடவடிக்கை கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த பொதுநல மனு:மேலுார் பகுதியில் பல்வேறு கிரானைட் குவாரிகள் செயல்பட்டன. இங்கு, விதிமீறல்களால் அரசுக்கு 16,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, அப்போதைய கலெக்டர் 2013ல் அறிக்கை சமர்ப்பித்தார். சட்டவிரோதமாக செயல்பட்ட, 84 குவாரிகள் மூடப்பட்டன. அவை அப்படியே கைவிடப்பட்டதால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இவற்றில் தேங்கும் மழைநீரில் மூழ்கி மனிதர்கள், கால்நடைகள் இறப்பது தொடர்கிறது. சம்பந்தப்பட்ட போலீசில் வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றை விதிகளின்படி சீரமைக்க வேண்டும். மண், கற்களால் மூடி மரங்களை நட்டு வளர்த்து சுற்றுச்சூழலை மேம்படுத்த வேண்டும். இதை கலெக்டர் தலைமையில் கனிமவளம், நீர்வளம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும்.மேலுார் பகுதியில் கீழவளவு, கீழையூர், இ.மலம்பட்டி, நாவினிபட்டி, தனியாமங்கலம், சருகுவலையபட்டி, திருவாதவூர், இடையபட்டி, புதுதாமரைப்பட்டியில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள குவாரிகளை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.மரணங்களை தடுக்க எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் நிறுவ வேண்டும். வேலி அமைக்க வேண்டும் என, தமிழக கனிமவளத் துறை முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது. அரசு தரப்பு, 'குவாரிகள் கைவிடப்படவில்லை. சட்டவிரோத குவாரிகள் குறித்து வழக்கு விசாரணை நடக்கிறது' என, வாதிட்டது.அதற்கு, 'இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லையே' என, தெரிவித்த நீதிபதிகள், கனிமவளத் துறை முதன்மை செயலர், கமிஷனர், மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி, தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நவ., 15க்கு வழக்கை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி