கூட்டுறவு குறித்து பேச்சு போட்டி பள்ளிகளில் 19ல் துவக்கம்
சென்னை:கூட்டுறவு தொடர்பாக, பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கட்டுரை போட்டிகள், வரும் 19ல் துவங்குகின்றன. அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் ஆறாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கூட்டுறவு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்தது. அதன்படி, கூட்டுறவு தொடர்பாக கதை சொல்லுதல், பேச்சு போட்டி, கட்டுரை போட்டிகள், வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. முதல்கட்டமாக, வட்டார அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. அதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள், வரும் 19ம் தேதி துவங்குகின்றன. கூட்டுறவு சங்கத்தின் கதைகள், சமூக பொருளாதார முன்னேற்றத்தில் கூட்டுறவுத் துறையின் பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடக்க உள்ளன. இதில், வெற்றி பெறும் மாணவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். வட்டார, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நவம்பர் மாதம் நடக்கும் கூட்டுறவு வார விழாவில், 2,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை பரிசுத் தொகைகள் வழங்கப்படும் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.