போராட்டத்தில் பங்கேற்க பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு
சென்னை: 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இம்மாதம் ஜாக்டோ - ஜியோ சார்பில் நடக்க உள்ள போராட்டங்களில், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, பங்கேற்க முடிவு செய்துள்ளது.இதன், மாநில நிர்வாகக்குழு கூட்டம், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில், நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவை ரத்து செய்ய வேண்டும்.தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசாணை 243ஐ செயல்படுத்த வலியுறுத்தி, நடக்க உள்ள ஜாக்டோ ஜியோவின் இரண்டு கட்டப் போராட்டங்களிலும் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.மேலும், தொடக்கக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மேல்நிலை, சார்நிலை விதிகளை திருத்தி, நேரடி நியமனத்தில் 10 சதவீதம் முதுநிலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். ஊக்க ஊதியத்துக்கு எதிரான அரசாணை 95ஐ ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் தங்கவேலு, பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.