மேலும் செய்திகள்
தீபாவளிக்கு 7,810 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு
22-Oct-2024
சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி, அரசு ஒப்பந்தத்தில், 1,000 தனியார் பஸ்கள் வரை இயக்க தயாராக இருப்பதாக, தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.சென்னை உள்ளிட்ட சில நகரங்களை தவிர, மற்ற பகுதிகளில், 7,000 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், 30 சதவீதம் டவுன் பஸ்கள். பெரும்பாலான பஸ்கள், மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. இந்நிலையில், முக்கிய வழித்தடங்களில், அரசு போக்குவரத்து துறை, முதல் முறையாக தனியார் பஸ்களை ஒப்பந்தத்திற்கு எடுத்து, அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் இயக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளன செயலர் தர்மராஜ் கூறியதாவது: தீபாவளி பண்டிகையின் போது, அரசு போக்குவரத்து கழகத்தின் கீழ், தேவைக்கு ஏற்ப தனியார் பஸ்களை இயக்க உள்ளோம். தமிழகம் முழுதும் 7,000 தனியார் பஸ்கள் உள்ளன. இவற்றில், 1,500 'ஸ்பேர்' பஸ்களாக எப்போதும் இருக்கும்.வழக்கமாக ஓடும் பஸ்களை தவிர, 'ஸ்பேர்' பஸ் களை, சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு இயக்க திட்டமிட்டு, இதற்கான பட்டியலை தயாரித்துள்ளோம். இப்படி, 1,000 தனியார் பஸ்கள் வரை இயக்க, நாங்கள் தயாராக உள்ளோம். பஸ் இயக்கம், பராமரிப்பு, ஓட்டுனர் என நாங்களே பார்த்துக்கொள்வோம். நடத்துனர் மட்டும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் அமர்த்தப்படுவர். தேவைக்கு ஏற்ப, அரசு போக்குவரத்து துறையின் வழிகாட்டுதல்களோடு, தனியார் பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளிக்கு பயணியர் எந்தவித பாதிப்பும் இன்றி, சொந்த ஊருக்கு சென்று வர வசதியாக, தனியார் பஸ்களை எடுத்து இயக்க உள்ளோம். அரசு பஸ்களை இயக்க, ஒரு கி.மீ.,க்கு 90 ரூபாய் செலவாகிறது. தனியார் பஸ்கள் இயக்க, ஒரு கி.மீ.,க்கு 51.25 ரூபாய் என நிர்ணயித்துள்ளோம். அரசு போக்குவரத்து கழகங்களுக்கான செலவு குறையும். இதனால், பயணியருக்கு எந்த பாதிப்பும் இருக்காது; கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது. இதுவரையில், 600க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களை இயக்க பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது. இது, தற்காலிக ஏற்பாடு தான். அரசு போக்குவரத்து கழகங்களை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்.
22-Oct-2024