உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காப்பீடு நிறுவனம் சேவை குறைபாடு; நுகர்வோருக்கு ரூ.90,000 வழங்க உத்தரவு

காப்பீடு நிறுவனம் சேவை குறைபாடு; நுகர்வோருக்கு ரூ.90,000 வழங்க உத்தரவு

சென்னை : சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீலதா என்பவர் தாக்கல் செய்த மனு:கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற, சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில், 2021 ஏப்., 22ல் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நான் அனுமதிக்கப்பட்டேன்.அப்போது, 'ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ்' என்ற நிறுவன 'கொரோனா கவாச்' காப்பீடு இருப்பதாக மருத்துவமனையிடம் தெரியப்படுத்தினோம். காப்பீடு காலம், 2020 ஆக., 9 முதல் 2021 மே., 21 வரை இருந்தது.சிகிச்சை கட்டணமாக, 2.51 லட்சம் ரூபாய் வந்தது. ஆனால், சிகிச்சை கட்டணத்தை, காப்பீடு நிறுவனம் ஏற்கவில்லை என்பதை, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.காப்பீட்டில் சேரும்போது, மருத்துவமனை சிகிச்சை மற்றும் சிகிச்சைக்கு பிந்தைய செலவுகளும், கொரோனா பாதிப்புக்கான முழு சிகிச்சையும் அடங்கும் என்றனர். உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தும், காப்பீடு நிறுவனம் மருத்துவ சிகிச்சைக்கான செலவை வழங்கவில்லை. 2021ல், காப்பீடு குறைதீர் பிரிவில் புகார் அளித்தேன்.இரு தரப்பு விசாரணைக்கு பின், 2022 மார்ச்., 3ல் மருத்துவ சிகிச்சைக்கான தொகையை, காப்பீடு நிறுவனம் வழங்க உத்தரவிட்டது. ஆனால், 1.92 லட்சம் ரூபாய் மட்டுமே காப்பீடு நிறுவனம் செலுத்தியது. மீதி தொகையை வழங்கவில்லை.சேவை குறைபாடு, மன உளைச்சல் ஏற்படுத்திய காப்பீடு நிறுவனம், 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை, சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் ஜிஜா, உறுப்பினர்கள் சிவக்குமார், நந்தகோபாலன் அடங்கிய அமர்வு விசாரித்தது.'மனுதாரரின் கணவருக்கு இருந்த இதய பாதிப்பு குறித்த விபரங்களை தெரியப்படுத்தவில்லை' எனக்கூறி, காப்பீடு நிறுவனம் மருத்துவ சிகிச்சை செலவை வழங்காமல், விண்ணப்பத்தை நிராகரித்தது ஏற்புடையதல்ல. காப்பீடு குறைதீர் பிரிவு, மருத்துவ சிகிச்சை தொகையை திருப்பி அளிக்க உத்தரவிட்டும், முழு தொகையை செலுத்தாமல் காப்பீடு நிறுவனம் சேவை குறைபாடுடன் செயல்பட்டுள்ளது.எனவே, மருத்துவ சிகிச்சை செலவு 90,927 ரூபாய், வழக்கு செலவு தொகையாக 5,000 ரூபாயை, எட்டு வாரத்தில் காப்பீடு நிறுவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், 9 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என, அமர்வு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை