சென்னை: மின்வாரிய, 'ஸ்டோரில்' இருந்து பிரிவு அலுவலகங்களுக்கு மீட்டர் வழங்காமல், வேண்டுமென்றே தாமதம் செய்வதால், புதிய மின் இணைப்பு வழங்கும் பணி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, அலுவலகத்தில் கையிருப்பில் உள்ள மீட்டர் இருப்பு விபரத்தை, விண்ணப்பதாரரின் மொபைல் போன் எண்ணுக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தனித்தனி மீட்டர்கள்
தமிழகத்தில் விவசாயம், குடிசை வீடு தவிர, மற்ற அனைத்து பிரிவுகளிலும் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, மீட்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. வீடுகளுக்கு ஒருமுனை, மும்முனை போன்ற பிரிவுகளில், மின் இணைப்பு வழங்குவதற்கு ஏற்ப, தனித்தனி மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன. தற்போது, புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ள பலருக்கு மீட்டர் வழங்காமல் தாமதம் செய்யப்படுகிறது. இது, விண்ணப்பதாரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:மின் இணைப்புக்கு விண்ணப்பித்து, இரு மாதங்களுக்கு மேலாகியும் இணைப்பு வழங்கப்படவில்லை. அதற்கு காரணமாக, 'மீட்டர் இல்லை' என்கின்றனர். மின்வாரியம் அனுமதி அளித்துள்ள நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக மீட்டர் வாங்கிக் கொடுத்தாலும், ஆய்வு செய்து பொருத்துவதாகக் கூறி, மின் இணைப்பு வழங்க வேண்டுமென்றே தாமதம் செய்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, பிரிவு அலுவலக பணியாளர்கள் கூறியதாவது: 'எதிர்பார்ப்பே'
வாரியத்தின், 44 மின் பகிர்மான வட்டங்களில் உள்ள, 'ஸ்டோர்'களில் மீட்டர் உள்ளிட்ட சாதனங்கள் இருப்பு வைக்கப்படுகின்றன. அங்கிருந்து, ஒதுக்கீடு கோரும் அலுவலகங்களுக்கு மீட்டர் அனுப்பப்படும். ஒருமுனை மீட்டருக்கு தட்டுப்பாடு உள்ளது. அதே சமயம், மும்முனை மீட்டர்கள் கையிருப்பில் உள்ளன.இருப்பினும், பல ஸ்டோர்களில் இருந்து மும்முனை மீட்டர் தர தாமதம் செய்யப்படுகிறது. இதற்கு, 'எதிர்பார்ப்பே' காரணம். புதிய இணைப்பு விண்ணப்பம், பரிசீலனை என அனைத்தும், 'ஆன்லைன்' வழியே மேற்கொள்ளப்படுகிறது. எனவே, விண்ணப்பம் பெற்றதும், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு உட்பட்ட ஸ்டோரில் எத்தனை மீட்டர்கள் உள்ளன, அதில் விண்ணப்பதாரருக்கு ஒதுக்கிய மீட்டரின் தனித்துவ எண் போன்ற விபரங்களை மொபைல் போன் எண்ணில், எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், விண்ணப்பதாரரை மீட்டர் இல்லை என, அலைக்கழிக்க முடியாது. குறித்த காலத்தில் மின் இணைப்பு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினர்.
12 லட்சம் மீட்டருக்கு 'ஆர்டர்'
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒருமுனைப் பிரிவில், 12 லட்சம் மீட்டர்கள் வாங்க, ஆறு நிறுவனங்களுக்கு பணி ஆணை சமீபத்தில் வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை, 40,000 மீட்டர்கள் வந்துள்ள நிலையில், தொடர்ந்து வர உள்ளன. கிடங்குகளில் ஏற்கனவே மும்முனைப் பிரிவில், 60,000 மீட்டர்கள் கையிருப்பில் உள்ளன. இது தவிர, கூடுதலாக வாங்கும் பணி நடக்கிறது. எனவே, மும்முனைப் பிரிவில் இணைப்புக்கு தாமதம் செய்வோர் குறித்து புகார் அளித்தால், காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.