உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டாம் தர்மபுரி தி.மு.க., நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி

பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டாம் தர்மபுரி தி.மு.க., நிர்வாகிகள் திடீர் போர்க்கொடி

தர்மபுரி:'தர்மபுரிக்கு பொறுப்பு அமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அவருடையை பி.ஏ., வேண்டாம்' என, தி.மு.க., நிர்வாகிகள் திடீரென போர்க்கொடி துாக்கி உள்ளனர்.தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலரான தடங்கம் சுப்பிரமணி, கடந்த ஒரு மாதத்துக்கு முன் மாற்றப்பட்டு, தர்மசெல்வன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவரும், கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றம் செய்யப்பட்டு, தர்மபுரி எம்.பி., மணி புதிய மாவட்ட பொறுப்பாளராக, தி.மு.க., தலைமை நியமித்தது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடாமல், தி.மு.க.,வில் கோஷ்டி பூசலை ஏற்படுத்தி, கட்சி வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும், தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான வேளாண் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய நேர்முக உதவியாளர், ஐ பேக் டீமில் பணியாற்றிய தேவ்ஆனந்த் ஆகியோரை, தர்மபுரி மாவட்டம் வர வேண்டாம் என தி.மு.க., நிர்வாகிகள் தலைமைக்கு புகார் அனுப்பி உள்ளனர். கூடவே, பன்னீர்செல்வம் பொறுப்பாளராக நீடித்தால், வரும் சட்டசபை தேர்தலில் மாவட்டத்திலுள்ள, 5 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க., தோற்கும் என்றும், வரும் சட்டசபைத் தேர்தலுக்கு தகுதியானவர்களை வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக தர்மபுரி எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்பழகன் விசாரித்துள்ளார். தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் துரைசாமி, அயலக அணி மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் பலரையும் அழைத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக விசாரித்த போது, அவர்கள் முழு விபரத்தையும் சொல்லி உள்ளனர். போலீஸ் விசாரணைக்கு பின், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் துரைசாமி கூறியதாவது:உங்கள் குறைகளை சொல்லுங்கள்; கட்சித் தலைமைக்கு தெரிவிக்கிறோம் என்றனர். மாவட்ட பொறுப்பு அமைச்சர் பன்னீர்செல்வம், எங்கள் மாவட்டத்துக்கு வேண்டாம்; அவர் இந்தப் பக்கம் வரவும் வேண்டாம். அவருடைய உதவியாளர் தேவ் ஆனந்தும் வேண்டாம். அவரால், இங்கு கட்சியில் கோஷ்டி பூசல் உருவாகி, கட்சி கலகலத்துள்ளது. அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி சமூக வலைதளத்தில் பதிவிட்ட தகவலை கூறினோம். அவர்களும், கட்சித் தலைமைக்கு விபரங்கள் அனுப்புவதாக கூறினர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ