உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமியை ஏமாற்றினாரா அ.தி.மு.க., மாவட்ட செயலர்? பன்னீர் ஆதரவாளர் புகார்

பழனிசாமியை ஏமாற்றினாரா அ.தி.மு.க., மாவட்ட செயலர்? பன்னீர் ஆதரவாளர் புகார்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, அவரது கட்சியின் மாவட்டச் செயலர் ஜெயசுதர்சன் ஏமாற்றி விட்டதாக பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தமிழகம் முழுதும் மூன்று கட்டமாக பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவரது சுற்றுப்பயணத்தில், கன்னியாகுமரி மாவட்டம் தவிர்க்கப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்களில் பழனிசாமி சுற்றுப்பயணம் சென்றபோது, அவரது முன்னிலையில் பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க.,வில் இணைந்தனர். ஆனால், ஏற்கனவே, அ.தி.மு.க., உறுப்பினர்களாக இருப்பவர்களையும், தன் ஆதரவாளர்களையும் பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைத்தது போல் நாடகம் ஆடியதாக, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் ஜெயசுதர்சன் மீது, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து, பன்னீர் தரப்பைச் சேர்ந்த, கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலர் செல்லப்பன் கூறியதாவது: அ.தி.மு.க., மாவட்டச் செயலராக ஜெயசுதர்சன் பொறுப்பேற்ற பின், தன்னுடன் இருப்பவர்களையே, இரண்டு, மூன்று முறை சென்னைக்கு அழைத்துச் சென்று, அ.தி.மு.க.,வில் இணைத்துள்ளார். ஆனால், பன்னீர்செல்வம் அணியிலிருந்து விலகி வந்ததாக சொல்லிக் கொண்டு இருக்கிறார். எங்கள் அணியைச் சேர்ந்த மூன்று பேர் மட்டும் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்; அவர்களை பன்னீர்செல்வம் நீக்கி விட்டார். பன்னீர்செல்வத்துடன் இருப்பவர்கள் அனைவரும் உறுதியாக உள்ளனர். பழனிசாமி ஆதரவாளர்களையே மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்த்து நாடகம் ஆடியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை